இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக என்.ராமசந்திரன் தேர்வு

Webdunia|
FILE
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ) புதிய நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக என்.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தை சேர்ந்த 65 வயதான என்.ராமச்சந்திரன் உலக ஸ்குவாஷ் சம்மேளன தலைவராகவும் இருக்கிறார். இவரது இளைய சகோதரர், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் ஆவார்.

இந்திய கோ-கோ சம்மேளன தலைவர் ராஜீவ் மேத்தா, ஐ.ஓ.ஏ.-யின் பொதுச் செயலாளராகவும், இந்திய டென்னிஸ் சங்க தலைவர் அனில்கண்ணா பொருளாளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதே போல் ஒரு சீனியர் துணைத்தலைவர், 6 இணைச் செயலாளர்கள் மற்றும் 9 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் போட்டியின்றி தேர்வானார்கள். 8 துணைத்தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டதால் அதற்கு மட்டும் தேர்தல் நடந்தது. மொத்தம் 138 உறுப்பினர்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் 2016-ம் ஆண்டு வரை நீடிப்பார்கள்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முந்தைய தேர்தல், ஒலிம்பிக் சாசனப்படி நடக்கவில்லை. அதாவது ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐ.ஓ.சி.) விதிமுறை அதில் கடைபிடிக்கப்படவில்லை. ஊழல் புகாரில் சிக்கிய அபய் சிங் சவுதாலா, லலித் பனோட் உள்ளிட்டோர் நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதனை ஏற்க மறுத்த ஐ.ஓ.சி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தை 2012-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி இடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்தது.
இதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஐ.ஓ.சி.யின் புதிய சட்ட விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்படி தற்போது தேர்தல் நடந்துள்ளது.

ஐ.ஓ.சி.யின் 3 பேர் கொண்ட கமிட்டி தேர்தல் கண்காணிப்பாளராக செயல்பட்டது. அந்த கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான ராபின் மிட்செல் கூறுகையில், 'ஐ.ஓ.ஏ. நிர்வாகிகள் தேர்தல் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் சோச்சி நகருக்கு நாளை (இன்று) சென்று விடுவோம். அங்கு ஐ.ஓ.சி. தலைவர் தாமஸ் பாச்சிடம் எங்களது அறிக்கையை சமர்ப்பிப்போம். அவர் செயற்குழு கூட்டத்தை கூட்டியதும், இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும். கூடிய சீக்கிரம் ஐ.ஓ.ஏ. மீதான நடவடிக்கை தளர்த்தப்படும் என்று நம்புகிறோம்' என்றார்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 3 இந்திய வீரர்கள் இந்திய தேசிய கொடியின் கீழ் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஒலிம்பிக் கவுன்சிலின் கொடியின் கீழ் தான் விளையாடி வருகிறார்கள். ஆனால் ஐ.ஓ.சி.யின் செயற்குழு கூட்டம், குளிர்கால ஒலிம்பிக் நிறைவு விழாவிற்கு முன்பாக நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ஐ.ஓ.ஏ. மீதான நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட்டால், மூன்று இந்திய வீரர்களும் நிறைவு விழாவில் நமது தேசிய கொடியின் கீழ் அணிவகுத்து செல்வார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :