கங்குலி சாதனையை முறியடித்த விராட் கோலி, சச்சின் சாதனையை முறியடிப்பாரா?


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (20:36 IST)
நேற்று வியாழக்கிழமை [22-10-15] நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி (26) தனது 23 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த போட்டியில் அவர், 140 பந்துகளில் 138 ரன்கள் குவித்தார்.
 
 
இதன் மூலம் அதிக சதங்கள் இந்திய வீரர்களில் சவுரவ் கங்குலியுடன் பகிர்ந்து கொண்டிருந்த விராட் கோலி, தற்போது அவரை முந்தி இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளார். சவுரவ் கங்குலி 22 சதங்கள் விளாசியுள்ளார்.
 
முதலிடத்தில் ’லிட்டில் மாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதே போன்ற உலகளவில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
 
தற்போது இந்தியாவின் சச்சினின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள். கோலி 165 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அதேநேரம் சச்சின் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை புரிந்துள்ளார்.
 
மேலும், விராட் கோலிக்கு தற்போது 26 வயதாகிறது. அவர் இன்னும் குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் வரை விளையாட வாய்ப்பிருக்கிறது. அப்படி விளையாடும் பட்சத்தில் அவர் சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும்.
 
அதேபோல தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 122 ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி 21 சதங்கள் குவித்துள்ளார். ஆனால், அவருக்கு 32 வயதாகிறது. இதனால், அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் உடல் தகுதியுடன் விளையாட முடியும் என்று தெரியாது.
 
அதேபோல தென் ஆப்பிரிக்காவின் ஒருநாள் கேப்டன் டி வில்லியர்ஸும் 23 சதங்கள் விளாசியுள்ளார். அவரும் 31 வயதை அடைந்துள்ளார். இதனால், அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பதும் தெரியாது.
 
இதனால், முழு உடல் தகுதியுடனும், ரன் குவிக்கும் திறனும் இன்னும் எட்டு ஆண்டுகள் இருக்கும் பட்சத்தில் சச்சினின் 49 சதங்கள் உட்பட ஏகப்பட்ட சாதனைகள் படைக்க முடியும் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்....
 
அதிக சதம் அடித்துள்ள முதல் ஐந்து வீரர்கள்:
 
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 49,
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)- 30,
சானத் ஜெயசூர்யா (இலங்கை) - 28,
குமார் சங்ககரா (இலங்கை) - 25,
விராட் கோலி (இந்தியா), டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) - 23.


இதில் மேலும் படிக்கவும் :