வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 10 ஆகஸ்ட் 2016 (15:24 IST)

தமிழ் திரையுலகில் தனித்து வென்ற ஜாம்பவான் பஞ்சு அருணாசலம்

தமிழக திரையுலகத்தில் பிரபல தயாரிப்பாளராகவும், கதாசிரியருமாகவும் அறியப்படுபவர் பஞ்சு அருணாசலம்.
 

 
1941ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்த தனது இளமைப் பருவத்தில் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக பணியாற்றியதன் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர் பஞ்சு அருணாசலம்.
 
தங்களது முன்னோர்களால் திரையுலகில் நுழைந்த எல்லோரும் ஜெயித்த வரலாறு கிடையாது. தனித் திறைமை கொண்ட சிலர் மட்டுமே நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் பஞ்சு அருணாசலம் அவர்கள் தனது பன்முகத் திறமையால் தனது இறுதி காலம் வரை திரைத்துறையில் தனித்து அறியப்பட்டவர்.
 
கண்ணதாசன் மறைவிற்கு பின்னர், அவரே பல திரைப்படங்களுக்கு பாடல்கள் இயற்றியும் உள்ளார். முதன் முதலில் கலங்கரை விளக்கம் படத்தில் ‘‘பொன்னெழில் பூத்தது’’ என்ற பாடலை இயற்றினார். பின்னர், 'சாரதா' படத்தில் வரும் 'மணமகளே, மருமகளே வா, வா’ என்ற பாடலின் மூலம் திரையுலகில் தனக்கான இடத்தை உறுதி செய்தார்.
 
தொடர்ந்து, ’என்னை மறந்ததேன் தேன்றலே’, ’என் மனத்தோட்டத்து வண்ணப்பறவை’, ’முத்தமிழ் கவியே.. முக்கனி சுவையும் தருக...’, ‘ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்’, ’புத்தும் புது காலை’, ’காதலின் தீபமொன்று’, ’கண்மணியே காதல் என்பது’, ’பருவமே புதிய பாடல் பாடு’, ’வா பொன் மயிலே’, ’எந்த பூவிலும் வாசம் வரும்’, ‘மேகம் கருக்கையில புள்ள தேகம் குளிருதடி’, ‘அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ போன்ற அற்புதமான பல பாடல்களை இயற்றியுள்ளார்.
 

 
இது தவிர அன்னக்கிளி, பிரியா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு முழுப் பாடல்களையும் எழுதியுள்ளார். முக்கியமாக பலரின் மறுப்பிற்கு பின்னரும் இசைஞானி இளையராஜாவை அறிமுகப்படுத்தி, தமிழ் திரையுலகில் ஓர் அரிதான வரலாற்று நிகழ்வை ஏற்படுத்திய பெருமை பஞ்சு அருணாசலம் அவர்களையே சாரும்.

இது குறித்து ஒருமுறை இளையராஜாவை அறிமுகப்படுத்தியது பற்றி கூறுகையில், “கதாசிரியர் ஆர்.செல்வராஜ் அப்போது என் உதவியாளராக இருந்தார். புதியவர்களை இசைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் என் ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட அவர், 'இளையராஜா என்று ஒரு இளைஞர் இருக்கிறார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்.....

இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் துணை இசை அமைப்பாளராக பணியாற்றுகிறார். அவரை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தலாம்' என்று என்னிடம் கூறினார்.
 
ஜி.வெங்கடேஷ் அப்போது கன்னடப்பட உலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். தமிழில் அவர் அதிகப்படங்கள் பண்ணவில்லை. அவரது இசைக்குழுவில் ராஜாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர் திறமை பற்றி எனக்குத் தெரியாது.
 

 
தொடர்ந்து செல்வராஜ் என்னிடம், 'இளையராஜாவிடம் 15 அற்புதமான டியூன்கள் இருக்கின்றன. சரியான வாய்ப்பு அமைந்தால் இசையில் நிச்சயம் சாதிப்பார்' என்றார்.
 
இளையராஜாவை வரவழைத்தேன். இசைக் கருவிகள் எதுவும் எடுத்து வராமல் சும்மா வந்திருந்தார். 'நாளைக்கு இசைக் கருவிகள் எடுத்து வந்து உங்கள் டியூன்களை வாசித்துக் காட்டுங்கள்' என்றேன்.
 
இளையராஜாவோ, 'வேண்டுமானால் இப்போதே பாடிக்காட்டுகிறேன்' என்றார். 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே', 'மச்சானப் பார்த்தீங்களா', 'வாங்கோனா' ஆகிய பாடல்களை தாளம் போட்டு பாடிக்காட்டினார். இசைக்கேற்றபடி அவருக்குத் தோன்றிய வார்த்தைகளை பொருத்தமாக போட்டுக்கொண்டு பாடினார்.
 
படம் தயாராகி முடிந்ததும், ரிலீஸ் செய்ய ரொம்ப சிரமப்பட்டேன். ஏற்கனவே என் படங்களை வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்த வினியோகஸ்தர்கள் யாரும் இந்தப் படத்தை வாங்க முன்வரவில்லை. புதிதாக வந்த வினியோகஸ்தர்கள்தான் வாங்கி திரையிட்டார்கள்.
 
படத்தின் ஆரம்ப ரிசல்ட் அப்படியொன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. ஆனால் சில நாட்கள் ஆனதும், படம் பிரமாதமாக ஓடியது. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது இளையராஜாவின் இசைதான்” என்று கூறினார்.
 
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் ஏற்றவாறு கதை எழுதி பல வெற்றி பாடங்களை தந்தவர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி, பிரியா, முரட்டுக்காளை, கழுகு, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, பாயும் புலி உள்ளிட்ட எண்ணற்ற படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.
 
'இளைய தலைமுறை', 'என்ன தவம் செய்தேன்' 'சொன்னதை செய்வேன்', 'நாடகமே உலகம்', 'மணமகளே வா' ,'புதுப்பாட்டு', 'கலிகாலம்', 'தம்பி பொண்டாட்டி' ஆகிய படங்களை இயக்கியவர்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் பல வெற்றிப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஆசிரியர் பஞ்சு அருணாசலம். நகைச்சுவைப் படமாக இருந்தாலும், கிளாசிக் வகை திரைப்படமாக இருந்தாலும் திரைக்கதையில் தனி முத்திரைப் பதித்தவர் பஞ்சு அருணாசலம்.
 
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி, பிரியா, முரட்டுக்காளை, கழுகு, போக்கிரி ராஜா, தர்மத்தின் தலைவன், மனிதன், தம்பிக்கு எந்த ஊரு, அடுத்த வாரிசு, ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, பாயும் புலி உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.
 
அதேபோல, நடிகர் கமல்ஹாசனின், உல்லாச பறவைகள், கடல் மீன்கள், கல்யாணராமன், மீண்டும் கோகிலா, சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, அபூர்வ சகோதரர்கள், சிங்கார வேலன் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.
 
இளையராஜா - பஞ்சு அருணாச்சலம் கூட்டணியில் எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்துள்ளன. ஆனால் பஞ்சு அருணாச்சலம் உடல் நிலை அவரை தொடர்ந்து எழுத விடாமல் செய்துவிட்டது.
 
21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் இளையராஜா இசையில் பாடல் எழுதியுள்ளார். அதுதான் முத்துராமலிங்கம் படம். அந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளிவரவுள்ள நிலையில் திரையுலகை விட்டு நிரந்தரமாக நீங்கி சோகத்தை ஏற்படுத்தி விட்டார்.