வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2015 (13:59 IST)

கொம்பனுக்கு திரையுலகம் ஆதரவு - முழு விவரம்

கொம்பன் படத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியை உயர்த்தி காட்டியிருப்பதாகவும், பிற சாதியினரை தரக்குறைவாக காண்பிக்கும் காட்சிகள், வசனங்கள் உள்ளதாகவும் கூறி, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி கொம்பனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
 

 
தமிழ்நாடு நாடார் சங்கம் என்ற சாதி அமைப்பும் கொம்பனை தடை செய்ய வேண்டும் என முதல்வரிடம் மனு அளித்தது. இதுபோல் பல்வேறு சாதி அமைப்புகளின் எதிர்ப்பை கொம்பன் சம்பாதித்தது.
 
கொம்பன் முடிவடைந்து திரையரங்குக்கு வரும் நேரம் இப்படி தடை கோருவது ஏற்க முடியாதது. தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை, அது என்ன சொல்ல வருகிறது என்பதை பார்க்காமலே தடை செய்ய வேண்டும் என கூற யாருக்கும் உரிமையில்லை. 
 
டாக்டர் கிருஷ்ணசாமியின் மனுவை விசாரித்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவுக்கு கொம்பன் படத்தை திரையிட்டு காண்பித்து அவர்களின் கருத்துகளை பெற உத்தரவிட்டது. 
 
அதன்படி நேற்று காலை நீதிபதிகளுக்கும், கிருஷ்ணசாமி தரப்பைச் சேர்ந்த சிலருக்கும் படத்தை காலை 7 மணிக்கு திரையிட்டு காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சரியான நேரத்துக்கு வந்த பிறகும் கிருஷ்ணசாமியின் ஆள்கள் உரிய நேரத்துக்கு வரவில்லை. ஒருமணி நேரம் தாமதமாக வந்தவர்கள், படத்தை பார்ப்பதற்கு முன், படத்தின் ஸ்கிரிப்டை படித்துப் பார்க்க வேண்டும் என்றனர்.
 
நீதிமன்றம் படத்தைப் பார்க்க மட்டுமே உத்தரவிட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துக்கூறி, அவர்களின் இதுபோன்ற சின்னச் சின்ன முட்டுக்கட்டைகளை தாண்டி படத்தை திரையிட மேலும் ஒரு மணி நேரம் ஆனாது.
 
படம் தொடங்கிய பத்து நிமிடத்துக்குள், படம் எங்களுக்குப் புரியவில்லை, மீண்டும் முதலிலிருந்து போடுங்கள் என கிருஷ்ணசாமியின் ஆள்கள் பிரச்சனை கிளப்பினர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கும், நீதிபதிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
கிருஷ்ணசாமியின் ஆள்கள் படம் பார்க்க வரவில்லை, அவர்களின் நோக்கம் வேறு என்பதை கொஞ்ச நேரத்திலேயே நீதிபதிகள் புரிந்து கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தங்களின் கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். அது சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்.
 
இந்தப் பிரச்சனையில் தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் என அனைத்து திரையுலக சங்கங்களும் கொம்பனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதன் நிர்வாகிகளுக்கு கொம்பன் படம் திரையிட்டு காட்டப்பட்டது. பிறகு அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
 
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தாணு, "படத்தில் எந்தவொரு தனி அமைப்பையோ, சாதியையோ குறிப்பிட்டு காட்சிகள் இல்லை" என்றார். சரத்குமாரும் இதே கருத்தை வெளியிட்டார். "குடும்ப சூழலை ஒற்றுமையாக இருக்கும்படி வலியுறுத்தியிருக்கிறார்கள். எந்தவொரு சாதிப் பிரச்சனையையும், சமூதாயப் பிரச்சனையையும் தூண்டும்படி படத்தில் காட்சிகள் இல்லை" என்றார்.
 
இயக்குனர் விக்ரமன் பேசுகையில், "படத்தில் எந்த சாதியையும், சமூகத்தையும் குறிப்பிடவில்லை. இவர்கள் (கிருஷ்ணசாமியும் அவரது ஆள்களும்) சொல்வது போல் காட்சிகள் இருந்தால் நான் சினிமாவை விட்டே விலகுகிறேன். படம் அவ்வளவு அருமையாக இருக்கிறது" என்றார்.

தணிக்கை செய்யப்பட்ட படத்தை தனி நபரோ, சாதி, மத, இன அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ தடை செய்ய வேண்டும் என்று கேட்க எந்த உரிமையும் கிடையாது. எந்தப் படைப்பையும் தடை செய்யக் கூடாது என்பதே எப்போதும் நமது நிலைப்பாடு. கொம்பன் விவகாரத்திலும் அதில் மாற்றமில்லை. அதேநேரம்,
 

 
ஒரு குறிப்பிட்ட சாதியினரை உயர்த்தி எடுக்கப்படும் படங்கள் நிச்சயம் ஆபத்தானவை. படத்தில் எந்த சாதிப் பெயரையும் குறிப்பிடவில்லை, யாரையும் விமர்சிக்கவில்லை என்று கூறி, திரைத்துறையினர் கொம்பன் போன்ற படங்களை நியாயப்படுத்த விழைவது ஏற்புடையதல்ல.
 
ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பம் ஒரு ஊரையே கட்டுப்படுத்துவதும், தன்னையும் தனது சுற்றத்தையும் மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று வசனம் பேசுவதும் அப்பட்டமான ஆதிக்க மனோபவம். அந்த நாயகனுக்கு குறிப்பிட்ட சாதியின் அடையாளத்தை தருகையில் அது, அப்பட்டமான ஆதிக்க சாதி மனோபவமாகவே பார்க்கப்படும். 
 
சினிமாவில் ஒரு கதாபாத்திரத்துக்கு சாதி அடையாளத்தை தர, சாதிப் பெயரை பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. வைக்கிற மீசை, பேசுகிற மொழி, செய்கிற சடங்குகள் போன்றவையே போதுமானவை. ஏன், வீட்டு சுவற்றில் தொங்குகிற ஒரு படத்தை வைத்தே அந்த கதாபாத்திரம் எந்த சாதி என்பதை அடையாளப்படுத்திவிட முடியும். 
 
மேலும், ஒரு சாதியை உயர்த்தி காட்டுவது என்பதே, பிற சாதியினரை மட்டம் தட்டுவதுதான். பீர்பால் கதை அதைத்தான் சொல்கிறது. ஒரு கோட்டை சின்னதாகக் காட்ட, அந்தக் கோட்டை அழிக்க வேண்டியதில்லை. அதன் அருகில் அதைவிட பெரிதாக ஒரு கோட்டை வரைந்தால் போதும். பிற சாதியினரை மட்டம் தட்ட அவர்களை கீழ்த்தரமாக காட்ட வேண்டியதில்லை. தனது சாதியை உயர்வாக காட்டினாலே போதும். 
 
கொம்பன் இயக்குனர் முத்தையாவின் முதல் படம் குட்டிபுலியில் அப்படியான காட்சிகள் நிறைந்திருந்தன. அந்தப் படத்திலும்  எந்த சாதிப் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், நாயகன் எந்த சாதி என்பதை படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடமே பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் விதத்திலேயே காட்சிகள் வசனங்கள் வைக்கப்பட்டிருந்தன. 
 
இதுபோன்ற படங்களை போராட்டங்களின் மூலமாக அல்ல, தொடர் விமர்சனங்களின் வழியாகவே எதிர்கொள்ள வேண்டும்.