வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By -ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 18 ஜூலை 2014 (12:22 IST)

இயக்குனர் கவிகாளிதாஸ் - நம்பிக்கையின்மையின் மரணம்

அஜீத்தை வைத்து உன்னைக் கொடு என்னை தருவேன் படத்தை இயக்கிய கவிகாளிதாஸ் மரணமடைந்துள்ளார். 45 வயதில் மஞ்சள் காமாலை அவர் உயிரைப் பறித்துள்ளது.
 
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் விளம்பரத்துக்கு அதிகம் செலவு செய்து எடுத்த படம் உன்னைக்கொடு என்னை தருவேன். அஜீத் வாலி படமெல்லாம் நடித்து வளர்ந்து வருகிற நேரத்தில் கவிகாளிதாஸின் கதையில் ஈர்க்கப்பட்டு உன்னைக்கொடு என்னை தருவேன் படத்தில் நடித்தார். சௌத்ரி, பார்த்திபன், சுகன்யா என்று படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் படத்தின் கதையில் அதிக நம்பிக்கை இருந்தது. கவிகாளிதாஸும் தன்னுடைய கதை தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பினார். முக்கியமாக படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியில் சிறையில் இருக்கும் பார்த்திபனுக்கும், அவரை நல்வழிப்படுத்தும் கன்னியாஸ்திரி சுகன்யாவுக்கும் ஏற்படும் உறவு படத்தின் அதிர்ச்சியூட்டும் திருப்பமாக இருக்கும் என நம்பினார். 
 
படம் வெளியானது. அவர்கள் எதிர்பார்த்த அந்தக் காட்சிகள்தான் ரசிகர்களுக்கு படம் பிடிக்காமல் போவதற்கு காரணமாக அமைந்தது. படம் தோல்வி. அனைவரையும்விட அதிர்ச்சியடைந்தவர் கவிகாளிதாஸ். பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்த வருடங்களில் அவர் யோசித்து செதுக்கிய கதை அது. அவர் மட்டுமே படத்தின் வெற்றியை எதிர்பார்த்திருந்தால் ஒருவேளை அதனை அவர் தாங்கியிருக்கக் கூடும். அந்த நேரத்தில் தமிழ் திரையுலகமே உன்னைக்கொடு என்னை தருவேன் படத்தை எதிர்பார்த்தது. பாக்யராஜும் தனது சிஷ்யனின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து பலமுறை பேசியிருந்தார்.

தோல்வி அனைத்தையும் தகர்த்தது. ஏற்கனவே மதுப்பழக்கம் இருந்த கவிகாளிதாஸை தோல்வி மேலும் மதுவில் அடிமைப்படுத்தியது. அவரது படம் வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்புதான் விக்ரமனின் அசிஸ்டெண்டாக இருந்த ராஜகுமாரனின் நீ வருவாய் என படம் வெளியாகி வெற்றி பெற்றது. இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். ராஜகுமாரனைவிட கவிகாளிதாஸ் மீதுதான் திரையுலகமும், தெரிந்தவர்களும் நம்பிக்கை வைத்திருந்தனர். இவை எல்லாமும் போதையில் தன்னை மூழ்கடிக்க கவிகாளிதாஸுக்கு போதுமானதாக இருந்தது.
 
அவரது நிலைமை அறிந்து, கவிகாளிதாஸுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பேன் என்று தெரிவித்தார் ஆர்.பி.சௌத்ரி. அந்த வாய்ப்பை அவர் பற்றிக் கொண்டு மேலெழுவார் என்றே அனைவரும் நம்பினர். ஆனால் சௌத்ரியின் வார்த்தை நடைமுறைக்கு வரவில்லை. யார் மீது குறை என்பதை இப்போது ஆராய்வதில் பலனில்லை. ஆனால் அந்த நேரத்தில் கதைக்காக கவிகாளிதாஸ் தனது அசிஸ்டெண்டுகளையும், மாலைமதி, ராணிமுத்துவையும் நம்புகிற அளவுக்கு தேய்ந்து போயிருந்தார்.
 
பாக்யராஜ் அவரது குரு பாரதிராஜா மீது வைத்திருக்கும் மரியாதை குறித்துதான் அதிகம் தெரியும். எல்லோரும் அதுபற்றிதான் பேசுவார்கள். அவர் தனது சிஷ்யர்கள் மீது கொண்டிருக்கும் கரிசனம் குரு பக்தியைவிட மேலானது. தோல்வியில் சரிந்து கொண்டிருந்த காளிதாஸுக்கு ஒரே நம்பிக்கையாகவும், ஆதரவாகவும் இருந்தவர் அவர்தான். காளிதாஸை சினிமாவில் நிலைநிறுத்த தான் இயக்கிய சொக்கத்தங்கம் போன்ற படங்களில் பணியாற்ற வைத்தார். காளிதாஸ் மரணமடைவதற்கு ஒரு மாதத்துக்கு முன்புகூட அவரை அவரது ஊருக்கு சென்று பார்த்து வந்ததாக கூறுகிறார்கள். 
 
காளிதாஸின் அதீத மதுப்பழக்கமே அவரது உயிரை பறித்திருக்கிறது. காளிதாஸின் மரணம் அவரது 45 ஆவது வயதில் சம்பவித்தது என்றால் அதீத பான்பராக் காரணமாக 44 ஆவது வயதில் இறந்து போனார் ராசு மதுரவன். அவரும் சூப்பர்குட் ஃபிலிம்ஸின் கண்டுபிடிப்புதான். உன்னைகொடு என்னை தருவேன் பேச்சுவார்த்தையில் இருந்தவேளை அவர் சூப்பர்குட் ஃபிலிம்ஸில் பூ மகள் ஊர்வலம் படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது பெயர் மதுரவன். 30 நாள்களில் முடிந்த அப்படம் ஐம்பது நாள்கள் ஓடி லாபம் சம்பாதித்தது. மகிழ்ந்துபோன சௌத்ரி அடுத்தப் படத்தையும் எனக்கே எடுக்க வேண்டும் என்று அவரது கட்டிடத்திலேயே அலுவலகம் போட்டுத் தந்தார். மதுரவனின் துரதிர்ஷ்டம். அடுத்தப் படம் பல காரணங்களால் டேக் ஆஃப் ஆகவில்லை. 

வெற்றிப் படத்தை தந்த மதுரவனுக்கு இரண்டாவது படம் கிடைக்க அவர் பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டி வந்தது. 2008 இல் வெளிவந்த பாண்டி படத்துடன் ராசுமதுரவனாக மீண்டும் இயக்குனரானார். மதுரவனின் சில படங்கள் தோல்வியடைந்தாலும் நடிகர்களை யதார்த்தமாக நடிக்க வைத்து நாடகத்தனமாக இல்லாமல் லைவ்வாக படமெடுக்கும் திறமை அவரிடமிருந்தது. ஆனால் அவரது பான்பராக் பழக்கம் 44 வது வயதிலேயே உயிரை பறித்துவிட்டது. இன்று அவர் வாங்கிய கடன்களின் சுமையுடன் கழிகிறது அவரது குடும்பம்.
 
முதல் தோல்வியிலேயே காளிதாஸ் தன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தார். இந்த நம்பிக்கையின்மையை மதுப்பழக்கம் ஆக்கிரமித்துக் கொண்டது. தோல்வி என்பது மனிதனுக்கு கடைசிப் படிக்கட்டல்ல என்று தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து அன்று எழுந்து வந்திருந்தால் இப்படியொரு நிலைமை அவருக்கு ஏற்பட்டிருக்காது. 
 
சாலிகிராமத்தில் காளிதாஸ் போல நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். தங்களின் பெயரை சினிமா சரித்திரத்தில் பொறிக்கும் ஆவேசத்துடன் வந்தவர்கள். வாய்ப்புகள் அமையாததும், கிடைத்த வாய்ப்புகள் தோல்வியில் முடிவதும் அவர்களை நம்பிக்கையின்மையின் சகதிக்குள் தள்ளுகிறது. போதை அதற்கொரு நிவாரணமாகிறது. அவர்களில் பலருக்கு காளிதாஸ், மதுரவன் போன்று நினைவுகூரல்கூட கிடைப்பதில்லை. நம்பிக்கையின்மை கடைசியில் ஒருவரின் நினைவுகளில்கூட இல்லாதபடி அவர்களை அழித்துவிடுகிறது.
 
சினிமாவுக்கு வருகிறவர்கள் அதன் புகழையும், பணத்தையும், படோபடத்தையும் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள். அதன் இருண்மையான இன்னொருபுறம் அவர்களுக்கு தெரிவதில்லை. அதனை அவர்கள் அறிந்து கொள்ளும் போது சுதாகரிக்க முடியாதபடி காலம் கடந்துவிடுகிறது. சினிமாவின் வெற்றியிலிருந்தல்ல அதன் தோல்விகளிலிருந்தும் மரணங்களிலிருந்தும்தான் நாம் அதிகம் படிக்க வேண்டியிருக்கிறது.