வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : புதன், 15 ஜூன் 2016 (14:29 IST)

அனுராக் காஷ்யப் படங்கள் - வதந்தியும் உண்மையும்

அனுராக் காஷ்யப் படங்கள் - வதந்தியும் உண்மையும்

உத்தா பஞ்சாப் படப்பிரச்சனை இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கை வாரியத் தலைவர் நிஹாலனியின் அர்த்தமற்ற பொய் குற்றச்சாட்டுகள் அனைவரையும் அதிர வைத்துள்ளது. 


 
 
பஞ்சாப் மாநிலம் எப்படி போதையின் பிடியில் உள்ளது என்பதை உத்தா பஞ்சாப் திரைப்படம் சொல்கிறது. படம் வெளியானால் ஆளும் சிரோமணி அகாலிதளத்துக்கும், அதன் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் பின்னடைவு ஏற்படும் என்று அக்கட்சியை சேர்ந்தவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அவர்களின் அச்சம் நியாயமானது. படத்தை வெளியிடாமல் தடுக்க, அவர்கள் படத்தின் மீதும், அதனை தயாரித்த அனுராக் காஷ்யபின் மீதும் அரசியல் சாயம் ஏற்றுகிறார்கள். ஆம் ஆத்மியிடம் பணம் வாங்கி அனுராக் காஷ்யப் இந்தப் படத்தை எடுத்ததாக கேள்விப்பட்டேன் என்று கூசாமல் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார் நிஹாலனி. அது பொய் என்பது தெரிந்தும் சிரோமணி அகாலிதளம் மற்றும் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் அனுராக் காஷ்யப் மீது இணையத்தில் கடும் விமர்சனங்களை வைக்கின்றனர். பெரும்பாலும் நக்கல் நையாண்டிகள். அனுராக் காஷ்யபின் படங்கள் தணிக்கையில் சிக்குவது முதல்முறையல்ல, அவரது முதல் படமே தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் வெளிவரவில்லை என அனுராக்கின் முந்தைய படங்களின் தரவுகளை வைத்து நிஹாலனியின் பொய்யை நியாயப்படுத்துகின்றனர். அவர்களின் குற்றச்சாட்டுக்கு அனுராக் காஷ்யப் விரிவாக பதிலளித்துள்ளார்.
 
வதந்தி 1 - அனுராக் காஷ்யபின் முதல் படம் பான்ச் பார்க்கத் தகுந்ததில்லை என்று தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்கவில்லை. அதனால் படம் இன்னும் வெளியாகாமலே உள்ளது.
 
உண்மை - பான்ச் படம் மறு தணிக்கையில், சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு திரையிட அனுமதிக்கப்பட்டது. படம் திரைக்கு வரவில்லை என்றாலும், நீக்கப்பட்ட காட்சிகளுடன் படம் இணையத்தில் பார்க்க கிடைக்கிறது.
 
வதந்தி 2 - பிளாக் ஃப்ரைடே திரைப்படமும் தணிக்கையால் தடை செய்யப்பட்டது. நீதிமன்றமும் தடை விதித்தது.
 
உண்மை - பிளாக் ஃப்ரைடே திரைப்படத்துக்கு தணிக்கைக்குழு எந்த வெட்டும் தரவில்லை. படத்தை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் வெளிவரவில்லை. பிறகு, வழக்கு முடியும் முன்பே படத்தை வெளியிட நீதிபதி அனுமதி அளிக்க, படம் வெளியானது. சிவசேனை குறித்த சில காட்சிகள் மட்டுமே நீக்கப்பட்டன.
 
வதந்தி 3 - குலால் திரைப்படமும் தணிக்கையால் முடங்கியது.
 
உண்மை - தணிக்கையில் குலால் படத்தின் சில வசனங்களை மட்டுமே நீக்க அறிவுறுத்தினர். படம் வெளியாக தாமதமானதற்கு தயாரிப்பு தரப்பின் பிரச்சனைகளே காரணம்.
 
வதந்தி 4 - வாட்டர் படமும் தணிக்கையால் தடை செய்யப்பட்டது.
 
உண்மை - மத அடிப்படைவாதிகள் செய்த பிரச்சனைகள் காரணமாக வாட்டர் படப்பிடிப்பே இந்தியாவில் அனுமதிக்கப்படவில்லை.
 
வதந்தி 5 - அக்ளி படத்தையும்  தணிக்கைக்குழு தடை செய்தது.
 
உண்மை - அக்ளி படம் தணிக்கையில் எந்தப் பிரச்சனையும் சந்திக்கவில்லை. படத்தில் புகைபிடித்தல் தொடர்பாக எச்சரிக்கை வாசகம் போட மாட்டோம் என்று சொன்னதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
பலரையும் போல தணிக்கைக்கும், அரசுக்கும் அனுசரணையாக படமெடுத்து கல்லாவை நிரப்புகிறவர் அல்ல அனுராக் காஷ்யப். இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் மத அடிப்படைவாதிகள், சாதி அடிப்படைவாதிகள், அர்த்தமற்ற தணிக்கைமுறை ஆகியவற்றுக்கு எதிராக படத்திலும், படத்துக்கு வெளியேயும் போராடுகிறவர். 
 
அப்படிப்பட்டவரின் படங்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாவதை, அனுராக் காஷ்யப் பிரச்சனைக்குரியவர் என்று பிஜேபியின் மண்டை வீங்கிகள் திரித்து எழுதி சுகம் காண்கின்றன. ராஜீவ் காந்தி கொலையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகை ஏகப்பட்ட வெட்டுகளுடன் திரைக்கு வர 14 ஆண்டுகளானது. அனுராக் காஷ்யப் எடுத்திருக்கும் திரைப்படங்கள் குஜராத் கலவரம் போன்ற மிக சென்சிடிவான பிரச்சனைகளை மையப்படுத்தியவை. குலால் படம் ராஜவம்சத்தின் ஆதிக்க சாதிகளின் கசடுகளை பேசுகிறது. பிரச்சனைகள் இல்லாமலிருக்குமா? அடிப்படைவாதிகள் சும்மா விடுவார்களா?
 
பஞ்சாபின் இளையதலைமுறை போதையில் புதையுண்டு போவதை படமாக எடுத்திருக்கிறார் ஒரு கலைஞன். அதனை மீட்சிக்கான வழியாக கருதி அதன் வழியில் முடிவுகள் எடுக்காமல், அரசியல் சாயம் பூசி ஒரு கலைஞனை அவமதிப்பது போல் கேவலம் வேறில்லை. 
 
தனது முந்தையப் படங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றி குறிப்பிடும் அனுராக், அந்த போராட்டங்கள் அனைத்தும் இரண்டு நம்பிக்கைகள் நடுவில் நடந்தவை. அவற்றில், என்னவென்று காரணம் தெரியாமல் தோல்வியடைந்ததில்லை. அந்தப் பிரச்சனைகளில் எங்கள் எதிரி யார், தனி நபரா, இல்லை ஒரு நம்பிக்கையா, தணிக்கைதுறையின் புரிதலா என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், இப்போது நடப்பது அச்சுறுத்தல், பொய் மூட்டைகள் என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
 
சாதி வெறியும், மத வெறியும் புரையோடிப்போன ஆதிக்க மனங்களிலிருந்தே அனுராக் காஷ்யப் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அந்த தீய மனங்களின் குறியீடாகியிருக்கிறார் நிஹாலனி.