செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2015 (17:31 IST)

குடி, கூத்தடி, கும்மாளமிடு - இந்திப் படம் சொல்லும் இதுதாண்டா பெண் சுதந்திரம்

Angry Indian Goddesses இதுதான் அந்தப் படத்தின் பெயர். படத்தின் கதை? அது கிடக்கிறது கழுதை.


 

 
வெங்கட்பிரபுவின் கோவா படத்தில் வெளிநாட்டுப் பெண்ணை கரெக்ட் செய்ய ஒருகூட்டம் இளைஞர்கள் கோவா செல்வார்கள். இதில், ஒரு இளம் பெண் தனது திருமணத்துக்காக தனது தோழிகளுக்கு கோவாவில் பார்ட்டி வைக்கிறாள்.
 
வருகிற தோழிகள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். அவர்களின் பின்னணி கதையும், புகை, மதுவுடன் அவர்கள் போடும் கும்மாளமும், அதனுnடே உரசிச் செல்லும் ஆணாதிக்க பார்வையும்தான் கதை.
 
பல வருடங்கள் முன்னால் தமிழின் முன்னணி நடிகைகள், சமூக சேவகிகள் சேர்ந்து பெண்களுக்காக ஒரு கூட்டம் நடத்தினார்கள். அரங்கம் நிறைய பெண்கள்.
 
கூட்டம் ஆரம்பமானதும் முன்னணி நடிகை மைக் பிடித்து, ஆண்களின் கட்டுப்பாடு இல்லாமல் மகிழ்ச்சியாக இருங்கள் என்று அறைகூவல்விடுக்க, ட்ரம்ஸ் முழங்கியது, வந்திருந்த பெண்கள் இசைக்கு ஏற்ப ஆடத் தொடங்கினர். கடைசியில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு புடவை பரிசளிக்கப்பட்டது.
 
பெண் சுதந்திரம் என்பதை முற்போக்கு பெண்ணியவாதிகள் எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது சிறிய உதாரணம்.
 
பெண்களுக்கு எதிரான வன்முறை உலகெங்கும் நடக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகம். பெண்களுக்கான சுதந்திரம் இன்னும் இந்தியாவில் உறுதி செய்யப்படவில்லை. தண்ணீருக்குள் அமுக்கப்பட்ட பந்தாக, எப்போது இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவோம் என ஒவ்வொரு பெண்ணும் ஏங்கிக் கொண்டிருக்கிறாள். 
 
சிலருக்கு இந்த ஏக்கம் அறிவுதளத்தில் புலனாகிறது. அப்பாவிகளுக்கு ஆழ்மனதளத்தில் இந்த ஏக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.
 
பிரச்சனை என்னவென்றால்...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

எது தங்களுக்கான சுதந்திரம் என்பது பலருக்கும் தெரிவதில்லை ஆண்களைப் போல் சிகரெட் பிடிப்பதும், மது அருந்துவதும், துணியை குறைத்து நடமாடுவதும், இசைக்கு ஆடுவதுமே பெண் விடுதலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


 

 
பான் நலின் இயக்கியிருக்கும், Angry Indian Goddesses திரைப்படத்தின் ட்ரெய்லரிலும் இதுபோன்ற காட்சிகளே இடம்பிடித்துள்ளன.
 
தனது குடும்பத்துப் பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் ஆண்கள், பிற பெண்கள் கட்டுப்பெட்டியாக இல்லாமல், அரைகுறை உடையுடன், ப்ரீ செக்ஸ் மனோபாவத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
 
பெண்கள் தங்களின் சுதந்திரமாக நினைக்கும் புகைப்பதும், மது அருந்துவதும், செக்ஸ் குறித்த குற்றவுணர்வு இல்லாமலிருப்பதும் பெண்களைவிட ஆண்களுக்கே சாதகமான விஷயங்கள்.
 
அவர்களின் சுதந்திரத்தால் அதிகம் ஆதாயம் பெறுகிறவர்கள் ஆண்களே. காதல் கோட்டை படத்தில் கரண் சொல்வது போன்று, தனது மனைவி அடக்கமாகவும், மத்த பெண்கள் கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதே அனைத்து ஆண்களின் ஆசை. 
 
பான் நலினின் திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு விருதுப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு விருதை வென்றது. ஆண்களும் சேர்ந்து ஓட்டளித்ததால் கிடைத்த வெற்றி இது.
 
ஒருகாலத்தில் குதிகால் தெரியாத அளவுக்கு உடையணிந்திருப்பதே பெண் நாகரிகம் என ஆண்களால் வலியுறுத்தப்பட்டது. அதை பெண்கள் மீறிய போது, எவ்வளவுக்கு எவ்வளவு நீ உடைகளை களைகிறாயோ, அந்தளவுக்கு நீ பேரழகி என்றது ஆணாதிக்கம்.
 
அழகிப் போட்டிகளிலும், மாடல் உலகிலும் பெண்கள் இன்று தாங்களாகவே முன்வந்து அரைநிர்வாணத்துடன் பூனை நடை நடக்கிறார்கள். முழுக்க உடையணிந்தாலும், முழுக்க உடை களைந்தாலும், ஆண்கள் எப்போதும் பெண்களை வெறும் உடலாகத்தான் பார்க்கிறார்கள்.


 

 
அந்த வளையத்துக்குள் பெண்களை வைக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். பெண் விடுதலை என்ற பெயரில் பெண்கள் மது அருந்துவதையும், ஆடை குறைப்பதையும், புகைப் பிடிப்பதையும், ப்ரீ செக்ஸ் மனோபாவத்துக்கு தயாராவதையும் ஆண்களின் உலகம் களிப்போடு வரவேற்கிறது.
 
சம்ஸாரா என்ற அற்புதமான படத்தை எடுத்த பான் நிலினின் Angry Indian Goddesses  அத்தகையதொரு படமாக இருக்காது என்று நம்புவோம்.