செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2015 (11:59 IST)

ஏஜிஎஸ் படம் தயாரிக்க தடை - தவறான பாதையில் தயாரிப்பாளர்கள் சங்கம்

தனி ஒருவன் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
 
ஏன், எதற்கு என்ற காரணம் இன்னும் சரியாகக் கூறப்படவில்லை எனினும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி விளம்பரங்கள் செய்ததால் இந்தத் தடை என கூறப்படுகிறது.


 

 
ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த, அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "தனி ஒருவன் படத்தை அதிக அளவில் விளம்பரப்படுத்தியதற்காக ஏ.ஜி.எஸ் நிறுவனம் படம் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அதிர்ச்சியாக இருக்கிறது" என்று கூறிய பிறகே இந்தத் தடை வெளியே தெரிய ஆரம்பித்தது.
 
பெரிய படங்கள் அதிக பணத்தை விளம்பரத்துக்கு செலவளிக்கின்றன. சின்ன பட்ஜெட் படங்கள் இந்த விளம்பர வெளிச்சத்தில் அமுங்கிவிடுகின்றன. அதனை தடுப்பதற்காக, பத்திரிகைகளில் கால்பக்கம் அளவுக்கே எந்தப் படமாக இருந்தாலும் விளம்பரம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அது நிலுவையில் உள்ளது.
 
எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்த போது கட்டுப்பாட்டை மீறி ஒரு பக்க விளம்பரம் தரப்பட்டது. எந்திரன் குறித்து தினகரன் பத்திரிகையுடன் ஒரு சப்ளிமெண்டே தரப்பட்டது. அப்போதெல்லாம் - அது ரஜினி படம் என்பதால் வாய் மூடி இருந்தது தயாரிப்பாளர்கள் சங்கம்.
 
கார்ப்பரேட் நிறுவனமான யுடிவி மிஷ்கின் இயக்கிய மாயாவி படத்தை தயாரித்த போது, விதியை மீறி முழுப்பக்க விளம்பரம் தினசரிகளில் தரப்பட்டது. அதற்கும் நடவடிக்கை இல்லை. அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்ட தயாரிப்பாளர்கள் சங்கம், தனி ஒருவனுக்கு விளம்பர கட்டுப்பாட்டை மீறியதாக படம் தயாரிக்க தடை விதித்திருப்பது எந்த அடிப்படையில்?

திரைப்பட சங்கங்கள் எதுவாக இருந்தாலும், அவை ஆளும்கட்சிக்கு சார்பாகவே எப்போதும் செயல்படும். செயல்பட்டிருக்கிறது. தாணு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு இந்த ஆளும்கட்சி சார்பு இன்னும் தீவிரமடைந்தது. இந்நிலையில், படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வாங்குவதில் சில கட்டுப்பாடுகளை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்தது.
 
தொலைக்காட்சி சேனல்கள் பதிலடியாக, இன்னும் ஒரு வருடத்துக்கு எந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையையும் வாங்கப் போவதில்லை என முடிவெடுத்தன. இது திரைப்படங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
 
சன் தொலைக்காட்சி மட்டும் இந்தத் தடையில் கலந்து கொள்ளவில்லை. எங்களுக்கு விருப்பமான படங்கள் எங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு கிடைத்தால் வாங்குவோம்...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க,,

என முடிவெடுத்தது. தொலைக்காட்சிகளின் இந்த முடிவு தயாரிப்பாளர்கள் சங்கத்தை நேரடியாக சீண்டி கோபப்படுத்தியது.
 
படங்களின் கிளிப்பிங்ஸ், ட்ரெய்லர்கள், பாடல் காட்சிகள் அனைத்தையும் தந்தி, ஜெயா மேக்ஸ், தூர்தர்ஷன் ஆகிய சேனல்களுக்கு மட்டுமே தர வேண்டும், பேட்டி மற்றும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட தொலைக்காட்சிகளை மட்டுமே அழைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது.


 

 
தன்னிச்சையான, சுயநல முடிவான இந்த கட்டுப்பாட்டை உதயநிதி எதிர்த்தார். ஜெயா மேக்ஸில் என்னுடைய படத்தை விளம்பரப்படுத்த இவர்களால் நேரம் வாங்கித் தரமுடியுமா என்று அவர் சமூகவலைத்தளத்தில் கேட்டார். 
 
தனி ஒருவன் படம் வெளியாவதற்கு முன் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடானது. அதில் கலந்து கொள்ள அனைத்து ஊடகங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதனை அறிந்த தயாரிப்பாளர்கள் சங்கம், உடனடியாக சந்திப்பை ரத்து செய்யும்படி அறிவுறுத்தியது. சங்கத்தை எதிர்த்தால் படத்தை ஒழுங்காக வெளியிட முடியாது என்பதால் உடனடியாக பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்தனர்.
 
தயாரிப்பாளர்கள் சங்கம் தவிர்க்க அறிவுறுத்திய ஊடகங்களுக்கு விளம்பரங்கள் தந்ததால் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு படம் தயாரிக்க தடை விதித்திருக்கிறர்கள். இது தமிழ் சினிமா வர்த்தகத்தை அதலபாதாளத்துக்கு இழுக்கும் முயற்சி.
 
மாற்றான், தெனாலிராமன், வை ராஜா வை என்று தொடர்ச்சியாக பெரும் தோல்விகளை சந்தித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு கடைசியாக இருந்த ஒரே நம்பிக்கை, தனி ஒருவன்.
 
அந்தப் படம் வெற்றி பெற்றால்தான் மீள முடியும் என்ற நிலையில், அதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர். விளம்பரங்களுக்கு பெரும்தொகை செலவு செய்தனர். அதற்கு பலனும் கிடைத்தது. படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
 
எந்தெந்த ஊடகங்களுக்கு விளம்பரங்கள் தர வேண்டும் எவை தவிர்க்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவர்களின் இந்த உத்தரவு அபத்தமானது என்று அவர்களுக்கே தெரியும். அதன் காரணமாகவே அதனை வெளிப்படையாக அறிவிக்க மறுக்கிறார்கள்.
 
மேலும், எந்திரன், மாயாவிக்கு சலுகை காட்டியவர்கள் தனி ஒருவனுக்கு மட்டும் கத்தி சுழற்றுவது எதேச்சதிகாரமாகவே பார்க்கப்படும்.