வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2016 (13:13 IST)

மீண்டும் கட்டம் கட்டப்பட்ட உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள கெத்து படத்துக்கு வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளது. யு சான்றிதழ் பெற்றும் வரிச்சலுகைக்கு படங்களை பரிந்துரைக்கும் குழு, படத்தின் பெயர் தமிழில் இல்லை எனக்கூறி, 30 சதவீத வரிச்சலுகைக்கு கெத்து தகுதியில்லை என நிராகரித்துள்ளது.


 
 
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் தயாரித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, வணக்கம் சென்னை, 7 ஆம் அறிவு, நீர்ப்பறவை உள்பட எந்தப் படத்துக்கும் வரிச்சலுகை அளிக்கப்படவில்லை. இந்தப் படங்கள் அனைத்தும் யு சான்றிதழ் பெற்றவை, தமிழ்ப் பெயர்களை கொண்டவை.
 
படத்தில் தமிழ் கலாச்சாரம் இல்லை, ஆங்கிலத்தில் உரையாடல் உள்ளது, வன்முறை அதிகம் என்றெல்லாம் காரணங்கள் கூறி இந்தப் படங்களுக்கு வரிச்சலுகையை மறுத்தனர். ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை என்று கூறி வரிச்சலுகை மறுக்கப்பட்டது. அந்தப் படத்துடன் வெளியான 3 படத்தில், பாரில் வைத்து நாயகன் நாயகிக்கு தாலி கட்டுவார். அது எந்தவகையான தமிழ் கலாச்சாரம்? 3 படத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டது.
 
பொங்கலுக்கு வெளியான கெத்து, தமிழ் பெயர் இல்லை என்று கூறி வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளது. கெத்து என்பதற்கு தமிழில் தந்திரம் என்று பொருள். கெத்து தமிழ் வார்த்தை. தமிழ் அகராதியில் கெத்து என்பது தந்திரம் என விளக்கம் உள்ளது. அப்படியிருக்க, கெத்து தமிழ் வார்த்தை இல்லை என்று எப்படி வரிச்சலுகையை மறுக்கலாம் என நீதிமன்றம் சென்றுள்ளார் உதயநிதி. ஏற்கனவே, தனது படங்களுக்கு மட்டும் வரிச்சலுகை மறுக்கப்பட்டதை எதிர்த்து அவர் தொடுத்துள்ள வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இப்போது இன்னொன்று.
 
வரிச்சலுகைக்கு படங்களை பரிந்துரைப்பவர்களுக்கு கெத்து என்பதற்கு தந்திரம் என்ற அர்த்தம் இருப்பது தெரியாது. தெரிந்திருந்தால், உதயநிதியின் முந்தையப் படங்களுக்கு சொன்ன காரணங்களைப் போல் எதையாவது கூறியிருப்பார்கள். இப்போது மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
 
உதயநிதியின் படங்களை மட்டும் குறி வைத்து இந்தக்குழு கட்டம் கட்டுகிறது. ஆளும் கட்சியின் அதிகார மையத்தை குளிர்விக்க அந்தக்குழு நடத்தும் ஆபாச நடவடிக்கை இது. திருட்டு விசிடி, சைக்கிள் கம்பெனி என பெயர் வைத்த படங்களுக்கெல்லாம் விதியை மீறி வரிச்சலுகை தந்தவர்கள், தமிழ்ப் பெயரான கெத்து, தமிழே இல்லை என்று கூறி வரிச்சலுகையை மறுத்துள்ளனர். இது அப்பட்டமான ஆபாசமான விதிமீறல். நமது நாட்டின் அனைத்துத்துறைகளும் இதுபோன்ற அடிமை விசுவாசிகளால் நிரம்பியுள்ளன. அதன் ஒருதுளிதான் கெத்து படத்துக்கு வரிச்லுகை தர மறுத்திருப்பது.
 
எவ்வளவுதான் உரக்கக் கூவினாலும் இந்த அடிமைகளின் செவிகள் திறக்கப் போவதில்லை. அது அதிகார மையத்தின் கட்டளைகளையும், துதிகளையும் மட்டுமே கேட்கிற செவிகள்.
 
தமிழகத்தை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.