ரிஷபம் - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 28 டிசம்பர் 2015 (16:47 IST)
ரசிப்புத் தன்மை அதிகம் கொண்டவர்களே! உங்கள் ராசிக்கு சுக வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டுப் பிறப்பதால் உங்களுடைய அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிடுவீர்கள்.

பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகைப் பிறக்கும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். வீட்டில் உங்கள் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். வங்கியில் லோன் கிடைத்து அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
01.01.2016 முதல் 07.02.2016 மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிலும் தெளிவான முடிவெடுக்க முடியாமல் குழம்புக் கொண்டிருந்த உங்களுக்கு ஒரு தெளிவுப் பிறக்கும். வருமானம் உயரும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் மணமகளாக அமைவார். மகளுக்கு இருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்று வலி, அலர்ஜி விலகும்.
எவ்வளவோ கோவில்கள் சென்றும், எத்தனையோ மருத்துவரிடம் ஆலோசித்து மருந்து மாத்திரை உட்கொண்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு குழந்தை இல்லையே என ஆதங்கப்பட்டீர்களே! அழகு, அறிவுள்ள பிள்ளை பாக்யம் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் இந்த வருடம் நடந்தேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புதியவரின் நட்பு கிடைக்கும்.
நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அவ்வப்போது தூக்கம் வராமல் அவதிபட்டீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். சிலர் புது வீட்டில் குடிப்புகுவீர்கள். வெளிநாடு சென்று வருவீர்கள்.
ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு 4-ல் அமர்வதால் உங்களின் அடிப்படை நற்குணங்களும், நடத்தை கோலங்களும் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்துக் கொண்டேயிருக்கும்.

இடப்பெயர்ச்சி உண்டு. மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். உத்யோகத்தின் பொருட்டோ அல்லது வீண் சந்தேகம், சச்சரவுகளால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக அனுகுவது நல்லது. அவ்வப்போது வாழ்க்கை மீது ஒருவித விரக்தி, வெறுப்பு வந்துப் போகும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.
வருடம் பிறக்கும் நேரத்தில் உங்களது ராசிநாதன் சுக்ரன் சனியுடன் சேர்ந்து நிற்பதால் குடும்பத்தில் விவாதங்கள், இருமல், தொண்டைப் புகைச்சல், மூச்சுப் பிடிப்பு வந்துச் செல்லும். புது பதவிகள், பொறுப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

07.01.2016 வரை ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். மூட்டு வலி, ஒற்றை தலை வலி, இரத்த சோகை வரக்கூடும். பூர்வீக சொத்துப் பிரச்னையில் தள்ளியிருங்கள். கேது 11-ம் வீட்டில் 07.01.2016 வரை தொடர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.
ஆனால் 08.01.2016 முதல் ராகு 4-ம் வீட்டிலும், 10-ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள். 4-ம் வீட்டில் ராகு அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரக்கூடும். உங்களின் தாயார் ஏதோ கோபத்தில் உங்களை சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அசைவம் மற்றும் கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.
இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்களை உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள். ஏறிக் கொண்டேப் போகும் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். டிரைவிங் லைசன்ஸ், இன்சுரன்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா. அவற்றையெல்லாம் புதுப்பித்துவிட்டீர்களா என பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவ்வப்போது அபராத தொகை செலுத்த வேண்டி வரும். அரசு அப்ரூவல் வாங்காமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம்.
வீட்டு மனை, நிலம் வாங்கும் போது சொத்துக்குரிய தாய்பத்திரத்தை கேட்டு வாங்குங்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சிலர் சொந்த ஊர், இருக்கும் இடத்தை விட்டு விலகி வேறு இடத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். வெளியூரிலோ, நகர எல்லைப் பகுதியிலோ சொத்து வாங்கியிருந்தால் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. சிலர் உங்களுடைய இடத்தை ஆக்கிரமிக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் இடையூறுகளும், நெருக்கடிகளும் வந்துப் போகும்.
10-ல் கேது அமர்வதால் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகமாகும். உத்யோகத்தில் முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. உங்களுடைய திறமைகளை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும், வாக்குறுதியும் தர வேண்டாம்.

கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் உங்களுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். மற்றவர்களுக்காக இரக்கப்பட்டு ஏமாற வேண்டாம். பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். மற்றவர்களின் தவறான போக்கை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.
27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்களின் சப்தமாதிபதியான செவ்வாயுடன் சனி சேர்வதால் கணவன்-மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். மனைவிக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள், தைராய்டு பிரச்னை, பித்தப் பையில் கல் வர வாய்ப்பிருக்கிறது. சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
இந்தாண்டு முழுக்க சனி ராசிக்கு களத்திர ஸ்தானமான 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் புதிதாக வரும் விளம்பரத்தை கண்டு ஏமாந்து சோப்பு, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். உடல் அசதி, சோர்வு, கை, கால் வலி வந்து விலகும். வருமான வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம். திருமணம் தள்ளிப் போகும்.
ஈகோ பிரச்னை, வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் வரும் சின்ன சின்னப் பிரச்னைகளையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். மனைவிக்கு கர்ப்பச் சிதைவு, ஹார்மோன் பிரச்னை வலி வந்துப் போகும். அவர் உங்களிடமிருக்கும் கெட்ட பழக்க வழக்கங்களை சுட்டிக் காட்டினால் அவரிடம் ஏட்டிக்குப் போட்டியாக நடந்துக் கொள்ளாமல் அவற்றையெல்லாம் திருத்திக் கொள்ள பாருங்கள்.
உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். எனவே மாற்றுவழியை யோசிப்பது நல்லது. முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும். அக்கம்-பக்கம் வீட்டாரை அனுசரித்துப் போங்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் இருந்தும், நட்பிருந்தும் அவர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விற்பனை மூலமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பழைய பாக்கியில் ஒரு பகுதி வசூலாகும். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். அண்டை மாநில வேலையாட்களை பணியில் சேர்க்கும் போது விசாரித்து சேர்ப்பது நல்லது. இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.

ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த புதிய தொடர்புகள் கிடைக்கும். என்றாலும் கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. கூட்டுத் தொழிலை தவிர்க்கப்பாருங்கள். புதிதாக அறிமுகமாகுபவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ளாதீர்கள். எலக்ட்ரிக்கல், ஷிப்பிங், பெட்ரோ-கெமிக்கல், மலிகை, சிமெண்ட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
8.01.2016 முதல் கேது உத்யோக ஸ்தானத்தில் அமர்வதால் உத்யோகத்தில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற சந்தேகம் தினந்தோறும் எழும். அதிகாரிகளுடன் அநாவசியப் பேச்சுகள் வேண்டாம். உங்களை விட வயதில் குறைவானவர்கள், திறமை குறைவானவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதை பார்த்து ஏங்குவீர்கள், ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆகஸ்டு மாதம் முதல் குரு சாதகமாவதால் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வுக்கான தேர்வில் வெற்றி பெறுவீர்கள். சிலர் அலுவலகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.
மாணவ-மாணவிகளே! விடைகளை எழுதி பாருங்கள். சிலர் விடுதியில் தங்கி படிக்க வேண்டி வரும். சக மாணவர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். கவிதை, கட்டுரைகள் எழுதி பரிசுப் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! தாயாருடன் மோதல் வரும். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். திருமணம் வாய்ப்புகள் கூடி வரும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சிப் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! பரபரப்பாக காணப்படுவீர்கள். கிசுகிசுத் தொந்தரவுகள் வரக்கூடும். ஆனால் பணவரவு உண்டு. உங்களுடைய படைப்புகள் எல்லோராலும் வரவேற்கப்படும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலாலும், எதிர்கட்சியினராலும் அமுக்கப்பட்டாலும் அனைத்தையும் முறியடித்து முன்னேறுவீர்கள். உண்ணா விரதம், ஊர் வலங்களை முன்னின்று நடத்தி புகழடைவீர்கள்.
விவசாயிகளே! மரப்பயிர் லாபம் தரும். பம்பு செட் அவ்வப்போது பழுதாகும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டையை பெரிது படுத்தாதீர்கள்.

இந்தப் புத்தாண்டு உங்களை அவ்வப்போது முணுமுணுக்க வைத்தாலும் புதிய வியூகத்தை அமைத்து வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்:

திருச்சி ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்காவல் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும்
அருள்மிகு ஜம்புகேஸ்வரரை திங்கள் கிழமையில் வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :