மிதுனம் - துர்முகி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2016

லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 13 ஏப்ரல் 2016 (16:30 IST)
நடுநிலையாளர்களே! சூரியன், புதன் மற்றும் சுக்ரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள், அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள்.
மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலைக் கிடைக்கும். விலைவாசி ஏறிக்கிட்டே போகுது; வாடகையும் தாறுமாற கூடிக்கிட்டே போகுது. புறநகர் பகுதியிலாவது அறை கிரவுண்ட், ஒரு கிரவுண்ட் வாங்கினா பத்து வருஷம் கழித்து வீடு கட்டிக்கிட்டு செட்டிலாகி விடலாம் என்று யோசிப்பீர்கள். கௌரவப் பதவி, புது பொறுப்புகள் தேடி வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும்.


உங்கள் ராசியிலேயே இந்த துர்முகி வருடம் பிறப்பதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. தோலில் நமைச்சல், தேமல், நரம்புச் சுளுக்கு, சிறுநீர் பாதையில் அழற்சி வரக்கூடும்.


இந்தாண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தலைமைத் தாங்குவீர்கள். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தந்தையாருடன் இருந்த பிணக்குகள் நீங்கும். வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும்.
செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் உண்டாகும். வீடு, மனை வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

ராகு 3-ம் வீட்டிலேயே இந்த வருடம் முழுக்க முகாமிட்டிருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். பழைய பிரச்னைகளை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். தடைப்பட்ட காரியங்களையெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். மாற்று மதம், மொழி, மாநிலத்தவர்களால் உதவிகள் உண்டு. இளைய சகோதர வகையில் ஆதரவுப் பெருகும்.
மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். ஆனால் கேது 9-ம் இடத்திலேயே நீடிக்கயிருப்பதால் தந்தையாருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சை, மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்துப் போகும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்துக் கொண்டேயிருக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள்.
26.10.2016 முதல் 02.12.2016 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் அமர்வதால் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள், சகோதர வகையில் மனத்தாங்கல், சின்ன சின்ன ஏமாற்றங்கள், பழைய கடனை நினைத்த கவலைகளெல்லாம் வந்துச் செல்லும். மின்சாரத்தை கவனமாக கையாளுங்கள்.

14.10.2016 முதல் 7.11.2016 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் பழுது, சளித் தொந்தரவு, லேசான தலை வலி, கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள், பிள்ளைகளால் செலவுகளெல்லாம் வந்துப் போகும்.
01.08.2016 வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் எந்த ஒரு வேலைகளையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என சரி பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது.
மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு ராசிக்கு 4-ல் நுழைவதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். தாயாருக்கு படபடப்பு, இரத்த அழுத்தம், பித்தப் பையில் கல், காலில் அடிப்படுதல் வந்துப் போகும். அவருடன் விவாதங்களும் வரக்கூடும். சிலர் உங்களை நேரில் பார்க்கும் போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும். வீட்டில் களவுப் போக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத்தினருடன் வெளியூர் செல்லும் போது நகை, பத்திரங்களையெல்லாம் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்வது நல்லது. கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்க்கப்பாருங்கள்.
வாகனத்தில் செல்லும் தவறாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சின்ன சின்ன விபத்துகள் ஏற்படக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 5-ல் அமர்வதால் குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் இனி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். குழந்தை பாக்யம் கிடைக்கும். தெய்வப் பிரார்த்னைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பாக்கிகளை கறாராகப் பேசி வசூலியுங்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். அறிவுப்பூர்வமாக சிந்திப்பதுடன் சந்தை நிலவரத்தையும் அறிந்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள். கட்டுமானப் பொருட்கள், பெட்ரோ-கெமிக்கல், போடிங், லாஜிங் வகைகளால் லாபம் அதிகரிக்கும். சித்திரை, ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவார்கள்.
இந்தாண்டு முழுக்க குரு சாதகமாக இல்லாததால் உத்யோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள். மூத்த அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிலர் உத்யோகம் சம்பந்தமாக இருக்கும் ஊரிலிருந்து, மாநிலத்திலிருந்து வேறு ஊர், மாநிலம் செல்ல வேண்டிய அமைப்பு உண்டாகும். சித்திரை, புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.

கன்னிப் பெண்களே! காதல் வேறு, நட்பு வேறு என்பதை உணருவீர்கள். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதியவரின் நட்பால் மகிழ்ச்சியடைவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம்.

மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். கடினமாக உழைத்து உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோரின் ஒத்துழைப்புடன் விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.

கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த நீங்கள் முன்னேறுவீர்கள். உங்களின் கற்பனை விரியும். புகழ் பெற்ற நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும்.

இந்தப் புத்தாண்டு வேலைச்சுமைகளை தந்தாலும், அனுபவ அறிவால் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:
ஸ்ரீராகவேந்திரரை வியாழக் கிழமையில் சென்று வணங்குங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :