மீனம் - துர்முகி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2016

லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 13 ஏப்ரல் 2016 (17:33 IST)
பரந்த மனசுக்கு சொந்தக்காரர்களே! இந்த துர்முகி வருடம் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பிறப்பதால் சின்ன சின்ன கனவுகளெல்லாம் நனவாகும். மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும்.

பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பது, அறைக் கட்டுவது, வீட்டிற்கு வர்ணம் பூசுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். ஊர் எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று சிலர் நகரத்தில் வீடு வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். தாய்வழி சொத்து கைக்கு வரும்.
இந்தாண்டு முழுக்க ராகுபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரச்னைகள் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். புது பதவிகள் தேடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். மழலை பாக்யம் கிடைக்கும். மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பர். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். எதிரானவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமொழி, மதம், அண்டைமாநிலத்தவர்களால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் உண்டாகும்.
என்றாலும் கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொள்வீர்கள். ஆன்மிக தளங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். சில நாட்கள் தூக்கம் குறையும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதையும் கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.
01.08.2016 வரை உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்துக் கிடப்பதால் முதல் முயற்சியிலேயே சில வேலைகளை முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. வீண் பழிகள் வரக்கூடும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் உங்களின் திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். விலை உயர்ந்த இரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களுடைய பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 8-ல் அமர்வதால் தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள்.
குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் அலைச்சல்கள் அதிகமாகும். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். எல்லோருக்கும் எல்லா வகையில் உதவியும் நம்மை ஏன் குறைக் கூறுகிறார்கள் என்று அவ்வப்போது புலம்புவீர்கள். வீட்டில் களவு நிகழ வாய்ப்பிருக்கிறது. சிலர் உங்கள் வாயை கிளறி வம்புக்கிழுப்பார்கள். நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 9-ல் நிற்பதால் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சிலர் வாஸ்து படி வீட்டை மாற்றி, விரிவுப்படுத்துவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். மனதில் தொக்கி நின்ற தாழ்வான எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்.
அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். சிறுக சிறுக சேமித்து ஒரு வீடோ, அல்லது மனையோ வாங்கிவிட வேண்டுமென்று ஆசைப்பட்டீர்களே! இப்போது நிறைவேறும். ஆனால் தந்தையாருடன் வாக்குவாதம், அவருக்கு நரம்புச்சுளுக்கு, மூட்டுத் தேய்மானம், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
இந்தப் புத்தாண்டு செவ்வாய், சுக்ரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் பிறப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். மனதில் அமைதி உண்டாகும். பேச்சில் கனிவு பிறக்கும். பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என நினைப்பீர்கள். கலை, இலக்கியம் இவற்றில் மனம் ஈடுபாடு கொள்ளும். சிலரின் படைப்புகள் பத்திரிக்கையில் இடம் பெற வாய்ப்பிருக்கிறது. உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் உறவினர், நண்பர்கள் மத்தியில் அதிகரிக்கும். நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களின் கோபம் குறையும்.
வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். இழப்புகளை சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சிலர் சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.

இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மக்கள் நடமாட்டம் அதிமுள்ள மெயின் ரோட்டிற்கு கடையை மாற்றுவீர்கள். பதிப்பகம், போடிங், லாஜிங், ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் பங்குதாரரா£க அறிமுகமாவார். வைகாசி, ஆவணி, தை, மார்கழி மாதங்களில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். சந்தையில் மதிப்புக் கூடும்.
02.08.2016 முதல் உத்யோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்த முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் பாராட்டிப் பேசப்படும். வைகாசி, ஆவணி, தை மாதங்களில் புது பொறுப்புக்கும், பதவிக்கும் உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். பொய் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். சின்ன சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று புது வேலையில் சேருவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். கூடுதல் மொழிக் கற்றுக் கொள்ள ஆசைப்படுவீர்கள். பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். அறிவாற்றல், நினைவாற்றல் கூடும். ஆசிரியர்களின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி தேர்வில் மதிப்பெண் வர வாய்ப்பிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். உங்களுடய தனித்திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விரும்பிய கல்விப் பிரிவில் சேர்ருவீர்கள்.
கலைத்துறையினரே! புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய படம் ரிலீசாகும். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைக்கும். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

இந்த தமிழ் புத்தாண்டு உடல் ஆரோக்யத்தையும், மன மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:

சனிக்கிழமையில் துளசி மாலை அணிவித்து பெருமாளை வணங்குங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :