கடகம் - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 28 டிசம்பர் 2015 (16:57 IST)
நன்றி மறவாதவர்களே! உங்களின் யோகாதிபதி செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். சொந்த வீடு சிலர் வாங்குவீர்கள். புது பதவி தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்திற்கு நிறைவேற்றுவீர்கள். சகோதரங்களுக்குள் நிலவி வந்த போட்டி பூசல்கள் விலகும். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். விலை உயர்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
உங்களுக்கு 2-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் உங்கள் பேச்சு இனி சபையில் எடுப்படும். எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு வலியை சொல்லிக் கொண்டிருந்தீர்களே! இனி உடல் வலி நீங்கி மனவலிமை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். அனுபவ பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள்.

குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். ஒரு கை பார்ப்போம் என்று தைரியமாக எல்லா பிரச்னைகளையும் எதிர்கொள்வீர்கள். அதிக வட்டிக் கடனை அடைக்க குறைந்த வட்டிக் கடன் கிடைக்கும். உங்களை அழுத்திக் கொண்டிருந்த தாழ்வுமனப்பான்மை தளரும். வாயிருந்தும் ஊமையாய் இருந்தீர்களே! இனி சுதந்திரமாய் சுயமாய் முடிவெடுப்பீர்கள்.
சூரியன் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். போட்டி, விவாதங்களில் வெற்றி கிட்டும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஆனால் வருடம் பிறக்கும் போது புதன் 6-ல் மறைந்திருப்பதால் வீண் குழப்பங்கள், எதிர்பாராத செலவுகள், உறவினர்களுடன் பகைமை வந்துச் செல்லும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை உங்களின் சஷ்டம-பாக்யாதிபதியான குருபகவான் வக்ரமாகி ராசிக்கு 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் டென்ஷன், மனஉளைச்சல், வேலைச்சுமை, வீண் பழி வந்து நீங்கும். உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாமே. மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வரும். திட்டமிட்ட காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வந்து எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். பிள்ளை பாக்யம் கிடைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும்.
காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். முன்கோபத்தால் நல்ல நண்பர்கள், வி.ஐ.பிகளையெல்லாம் இழந்தீர்கள்! இனி கனிவாக பேசுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம், காது குத்தையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைவதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். எந்த ஒரு வேலைகளையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். தங்க ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களை கவனமாக கையாளுங்கள்.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பூர்வீக சொத்திற்காக கோர்டு, கேஸ் என்றெல்லாம் செலவு செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் அதிக உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வசதி, செல்வாக்கை கண்டு மயங்கி தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். அசைவ மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வப்போது நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மூச்சு திணறல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்துப் போகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். சிலர் உங்களை நேரில் பார்க்கும் போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி தவறானவர்களாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். தந்தையாருடன் சின்ன சின்ன மோதல்கள் வரும். அவருக்கு நெஞ்சு எரிச்சல், சிறுநீரக கோளாறு, சுவாசப் பிரச்னை வந்துச் செல்லும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடை, தாமதம் வந்துச் செல்லும்.
08.01.2015 ராகுபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தனஸ்தானத்தில் வந்து அமர்கிறார். ஓரு பக்கம் பணம் வந்தாலும் மற்றொரு பக்கம் அதற்கு தகுந்த செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது.
கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்குக் கண்ணாடி அணியக் கூடும். பல் ஈறு வீக்கம், கணுக்கால், காது, மூக்கு வலி வந்துப் போகும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால் முடிந்த வரை அநாவசியப் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது.
எனவே இடம், பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது. குடும்பத்திலும், கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வரும். சில நேரங்களில் சில இடங்களில் வாக்குத் தவற வேண்டி வரும். கேது 8-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். தன்னம்பிக்கை குறையும். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள்.
உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டுமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஊடல் அதிகரிக்கும். சந்தோஷமாக ஓர் இடத்திற்குப் போக வேண்டுமென்று திட்டம் போட்டுக் கிளம்பினால் ஏதாவது சங்கடம் எதிர்பாராமல் குறுக்கே வரும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். தானே முயன்று முன்னுக்கு வரப்பாருங்கள்.
இந்தாண்டு முழுக்க உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டிலேயே சனிபகவான் தொடர்வதால் சிந்திக்கும் ஆற்றல் குறையும். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் நேராக்குங்கள். பிள்ளைகள் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள். அதிக அறிவுரைச் சொல்லி அவர்களை நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள்.

ஒரே வாரத்தில், ஒரே மாதத்தில் திருத்திவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அவர்களை கொண்டுவர வேண்டும். அதைப் புரிந்துக் கொண்டு செயல்படப்பாருங்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் அடிப்படை நடத்தைக் கோலங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
எனவே அவரின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை தூக்கவோ, சுமக்கவோ வேண்டாம். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையில் மூக்கை நுழைக்காதீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

இப்படி நடந்திருக்குமோ! அப்படி சொல்லியிருப்பார்களோ! என்று எல்லோரையும் சந்தேகக் கண்ணுடன் தான் பார்ப்பீர்கள். முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்துப் போகும். எந்த சூழ்நிலையிலும் மற்றவர்கள் முன்னிலையில் மனைவியை மரியாதைக் குறைவாக பேச வேண்டாம். சொந்த-பந்தங்களில் யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதை கண்டுபிடிப்பதில் ஒரு தடுமாற்றம் இருக்கும்.
வியாபாரத்தில் அனுபவ அறிவை பயன்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்த புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை அன்பாக சுட்டிக் காட்டி திருத்துங்கள். பழைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். ஜனவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பழைய பங்குதாரர் விலகுவார். உணவு, எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், ஸ்டேஷ்னரி, பப்ளிக் கேஷன், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். ஆகஸ்டு மாதம் முதல் குரு 3-ல் மறைவதால் அடிக்கடி விடுப்பில் செல்வோரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். அலுவலக ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. மேலதிகாரிகள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். உங்களின் உரிமையையும், சலுகையையும் தக்க வைத்துக் கொள்ள வழக்குத் தொடுக்க வேண்டி வரும். ஜனவரி, ஏப்ரல், ஜுன் மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னிப்பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உங்களுக்குள் சில உறுதிமொழி எடுப்பீர்கள். பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கப்பாருங்கள். தடைபட்ட உயர்கல்வி போராடி முடிப்பீர்கள். புதியவான் நட்பால் உற்சாகமடைவீர்கள். கனவுத் தொல்லை, முகப்பரு வந்துச் செல்லும்.

மாணவ-மாணவிகளே! பொறுப்பாக படியுங்கள். வகுப்பறையில் அரட்டை பேச்சை தவிர்த்துவிடுங்கள். உங்களின் திறமையை வெளிக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். அடிக்கடி விடுப்பில் செல்ல வேண்டாம். பள்ளி மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கொஞ்சம் போராடி செலவுகள் செய்து எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர வேண்டி வரும்.
கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தகவல் தருவது நல்லது. உட்கட்சி பூசலில் ஆர்வம் காட்டாதீர்கள். தலைமையை பகைத்துக் கொள்ளவேண்டாம். சகாக்கள் சிலர் உங்கள்மீது அதிருப்தியடைவார்கள்.
விவசாயிகளே! எலித் தொல்லை அதிகமாகும். கரும்பு, தேக்கு லாபம் தரும். குறுகிய காலப் பயிர்களால் நட்டம் வரும்.

இந்தப் புத்தாண்டு சிறுசிறு தடைகளையும், தடுமாற்றங்களையும் தந்தாலும் இடையிடையே வெற்றியையும், மகிழ்ச்சியையும் தரும்.

பரிகாரம்:
நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயரை ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். இதய நேயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :