வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 26 டிசம்பர் 2015 (16:18 IST)

கும்பம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

அடுத்தவர்களின் நிறை, குறைகளை இங்கிதமாக எடுத்துரைப்பதில் வல்லவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை படாதபாடு படுத்தியெடுத்திக் கொண்டிருந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமருவதால் திக்கு திசையறிவீர்கள். உங்களின் அறிவாற்றலை மழுங்க வைத்த ராகுபகவான் இப்பொழுது உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வரப்போகிறார். சோம்பல் நீங்கி உற்சாகமடைவீர்கள்.
 
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் சந்தோஷம் நிலைக்கும். என்றாலும் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகு அமர்வதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது.
 
மனைவி ஏதேனும் குறைக் கூறினாலும் அதை அப்படியே மறந்து விடுவது நல்லது. அவருடன் எதிர்வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, தைராய்டு பிரச்னை, முதுகுத் தண்டில் வலி, இரத்த அழுத்தம் வந்துப் போகும். எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
 
யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். மறதியல் விலை உயர்ந்த செல்போன், நகைகளை இழக்க நேரிடும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்கும் யோகம் உண்டாகும். அவ்வப்போது ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும். திருமணம் தள்ளிப் போய் முடியும். உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும். வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளை கடக்கும் போதும் நிதானம் அவசியம்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நடக்கும். அரசு விவகாரங்களில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். என்றாலும் வேனல் கட்டி, உடல் உஷ்ணம், அடிவயிற்றில் வந்துப் போகும். மனைவிக்கும் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். அயல்£டு செல்ல விசா கிடைக்கும்.
 
ராகுபகவான் உங்கள் யோகாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் பணம் வரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். சிலர் வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பெற்றோரின் உடல் நிலை சீராகும். கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடு களைக்கட்டும். உறவினர்கள் மதிப்பார்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கனவுத் தொல்லை வந்துப் போகும். தாழ்வுமனப்பான்மை மற்றும் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப்பாருங்கள். வேற்றுமொழிக்காரர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. எண்ணெய் மற்றும் வாயுப் பதார்த்தங்களை தவிர்த்துவிடுங்கள். வாகனம் வாங்குவீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். கேள்விக்கு விடை எழுதும் போது முக்கிய கீ ஆன்சரை மறந்துவிடாதீர்கள். நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோரிடம் எதிர்விவாதம் செய்துக் கொண்டிருக்காதீர்கள்.
 
கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் தாமதமாகி முடியும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவர்களுக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். வயிற்று வலி, தோலில் அலர்ஜி வந்துப் போகும்.
 
அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சியினரை வசைப்பாட வேண்டாம். தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். நீங்கள் எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க சிலர் முயல்வார்கள்.
 
கலைத்துறையினரே! சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்ன சின்ன வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
விவசாயிகளே! வாய்க்கால் தகராறு, வரப்பு தகராறை எல்லாம் பெரிது படுத்த வேண்டாம். பூச்சித் தொல்லை அதிகரிக்கும். மரப் பயிர்களும், தோட்டப் பயிர்களும் ஆதாயம் தரும்.
 
வியாபாரத்தில் விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். லாபம் மந்தமாக இருக்கும். கூட்டுத் தொழில் வேண்டாமே. புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கடையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். கமிஷன், ரியல் எஸ்டேட், மூலிகை, வாகன உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள்.
 
உத்யோகத்தில் முன்பு போல் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். சிலர் வழக்கில் சிக்க வாய்ப்பிருக்கிறது.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு உங்களை பக்குவமில்லாமல் பேச வைத்து பல பிரச்சனைகளில் சிக்க வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்தமருவதால் இனி இடம், பொருள், ஏலறிந்துப் பேசத் தொடங்குவீர்கள். தடுமாறிக் கொண்டிருந்த உங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். குடும்பத்தாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். என்றாலும் ராசிக்குள் கேது அமர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.
 
எதிலும் ஒருவித சலிப்பு, முன்கோபம், தலைச்சுற்றல், ஒற்றை தலை வலி, கை, கால் மரத்துப் போகுதல் வந்துச் செல்லும். பணம் வந்தாலும் கட்டுப்படுத்த முடியாதபடி செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். கொழுப்புச் சத்து உடலில் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி அவசியமாகிறது. எண்ணெய் மற்றும் வாயுப் பதார்த்தங்களை தவிர்க்கப்பாருங்கள்.
 
இரத்த சோகை வரக்கூடும். இரத்தத்தில் இரும்புச் சத்துகள் குறைய வாய்ப்பிருக்கிறது. மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது. பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை வந்து நீங்கும். வட்டிக்கு வாங்கிய கடனை எப்படி அடைக்கப் போகிறோமோ என்ற பயம் வரும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். யோகா, தியானத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் தன-லாபாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் பாதியில் நின்ற வேலைகளை முடிப்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வேற்றமதத்தவர்களின் நட்பால் சாதிப்பீர்கள். சிலர் புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் மனஇறுக்கம், வீண் குழப்பம், எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். தைரியசாலியாக உங்களைக் காட்டிக் கொண்டாலும், உள்மனதில் ஒருவித பயம் பரவும்.
 
உங்களின் சேவகாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் பரபரப்பாக காணப்படுவீர்கள். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. சகோதர வகையில் பிணக்குகள் வரும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 
 
வியாபாரத்தில் சில சூட்சுமங்களைத் தெரிந்துக் கொள்வீர்கள். மக்களின் ரசனையை அறிந்து செயல்படுங்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக நடத்துங்கள். பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். உத்யோகத்தில் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலதிகாரியிடம் கொண்டு செல்ல வேண்டாம். கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். புதிதாக அறிமுகமாகும் ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.
 
இந்த ராகு-கேது பெயர்ச்சி எதிர்காலம் பற்றிய ஒரு பயத்தையும், கேள்விக்குறியையும் தந்தாலும் அவ்வப்போது அனுசரித்துப் போவதன் மூலமாக ஓரளவு நிம்மதியையும் தரும்.
 
பரிகாரம்:
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிறையணிவாணுதலாள் அம்மை உடனுறை ஸ்ரீநாகேஸ்வரரையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் ஏதேனும் ஒரு பௌர்ணமி திதி நாளில் சென்று வணங்கி வாருங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.