வெள்ளி, 29 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. எழுச்சிக் கட்டுரைகள்
Written By Webdunia

மின்னஞ்சலில் வந்த தகவல்!

மின்னஞ்சலைப் பற்றி நமக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி இது.

வேலை இல்லாத இளைஞன் ஒருவன் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தான்.

webdunia photoWD
நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவனிடம் தரையை சுத்தம் செய்யச் சொன்னார்கள். அதிலும் அவன் தேர்ச்சி பெற்றான். இறுதியாக அந்நிறுவனத்தின் மேலதிகாரி அவனிடம், "உன்னுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடு. அதில் உனக்கான விண்ணப்பத்தை அளிக்கிறேன். அதனை பூர்த்தி செய்து என்று வேலைக்கு சேர்கிறாய் என்பதையும் குறிப்பிட்டு எனக்கு அனுப்பு" என்றார்.

இதற்கு பதிலளித்த இளைஞன், "என்னிடம் கணினியும் இல்லை. மின்னஞ்சலும் இல்லை" என்றான் வருத்தத்துடன்.

மேலதிகாரி, "என்ன மின்னஞ்சல் இல்லையா. யாருக்கு மின்னஞ்சல் இல்லையோ அவர்கள் தகுதியானவர்கள் இல்லை. தகுதியில்லாதவர்களுக்கு இங்கு வேலை இல்லை" என்று இளைஞனை அனுப்பிவிட்டார்

அந்த இளைஞனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தன்னிடம் உள்ள 10 ரூபாயை வைத்து என்ன செய்வது, ஒரு மின்னஞ்சலை உருவாக்க இயலாதே என்று கவலையுற்றான்.

திடீரென அவனுக்கு ஒரு திட்டம் உதயமானது. அதாவது மொத்த விற்பனை சந்தைக்குச் சென்று...

அங்கு 10 ரூபாய்க்கும் தக்காளி வாங்கினான். அதனை வீடு வீடாகச் சென்று விற்றான். 2 மணி நேரத்தில் அவன் போட்ட முதலீடு இரண்டு மடங்காக ஆனது.

உடனே 20 ரூபாய்க்கும் தக்காளி வாங்கி மீண்டும் வீடு வீடாகச் சென்று விற்றான். 40 ரூபாய் கைகளில் கிடைத்தது. இதையே மீண்டும் செய்ததில் 80 ரூபாய்களை சம்பாதித்தான்.

அப்போதுதான் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது. ஏன் தினமும் இப்படியே செய்து லாபம் ஈட்டக் கூடாது என்று எண்ணினான்.

webdunia photoWD
மறுநாள் அதிகாலையிலேயே புறப்பட்டு தக்காளிகளை வாங்கி வீடு வீடாக விற்றுவிட்டு மாலையில் அவன் வீடு திரும்பும் போது அவன் போட்ட முதல் தொகையை விட பல மடங்கு பணம் அவன் கைகளில் இருக்கும்.

இப்படியே நாட்கள் செல்ல செல்ல தக்காளி விற்பதற்கு ஒரு தள்ளு வண்டியை வாங்கினான். பின்னர் அதுவே டிரக்காக மாறியது. பின்னர் தக்காளியை பதமாக வைத்து எடுத்துச் செல்லும் விற்பனை வண்டியை வாங்கினான்.

5 ஆண்டுகளில் அவன் மொத்த வியாபாரத் தொழிலில் முக்கிய அதிபராக விளங்கினான்.

மிகப்பெரிய தொழிலதிபராக ஆன பிறகு தனது குடும்பத்திற்கான ஒரு பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க எண்ணி, ஆயுள் காப்பீட்டில் சேர விரும்பினான்.

ஆயுள் காப்பீட்டு தரகரை தொடர்பு கொண்டு பேசினான். அப்போது, குடும்ப உறுப்பினர் விவரம், தொகை விவரம் போன்றவற்றுடன் அவரது மின்னஞ்சல் முகவரியையும் தரகர் கேட்டார்.

அப்போது அந்த இளைஞன், "என்னிடம் மின்னஞ்சல் முகவரி இல்லை" என்று பதிலளித்தார்.

அதிர்ச்சி அடைந்த தரகர், "என்ன உங்களிடம் மின்னஞ்சல் முகவரி இல்லையா. இவ்வளவு பெரிய ஆளாக இருக்கின்றீர்கள். நீங்கள் மின்னஞ்சல் வைத்திருந்தால் இன்னும் எப்படி இருந்திருப்பீர்கள் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்?" என்றான்.

இளைஞன் தான் கடந்து வந்த வாழ்க்கையை ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்துவிட்டு புன்னகையுடன் பதிலளித்தார், "ஆம், தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் உதவியாளனாக பணியாற்றிக் கொண்டிருந்திருப்பேன்."