5 வயது சிறுவனின் மனதையும் வறுமை பாதிக்கிறது!

Webdunia| Last Modified புதன், 14 நவம்பர் 2007 (20:44 IST)
வறுமையில் வாடும் ஏழைக் குடும்பங்களில் வசிக்கும் குழந்தைகள் தங்களின் 5 ஆவது வயது முதல் ஏக்கத்தினால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

யார்க் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள், அமெரிக்க நகரங்களில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் மன அழுத்தம் குறித்து ஆய்வு நடத்தினர்.

அதில் குழந்தைகள், தங்களின் பெற்றோருக்கு சுமையாக இருந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஏக்கத்தைத் தாங்கிக் கொண்டு எவ்வாறெல்லாம் வாடுகின்றனர் என்று அவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
வறுமையின் கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் குடும்பத்திற்கு சுமையாக இருக்கக் கூடாது என்று 5 வயது சிறுவன் கூட நினைக்கிறான்.

அதற்காகவே தங்களின் சின்னஞ்சிறிய ஆசைகளையும், ஏக்கங்களையும் அவர்கள் மறைக்கின்றனர். சில குழந்தைகள் அதிகமாகப் பயப்படுகின்றனர்.
இன்னும் சில குழந்தைகள் தங்களின் பிறந்தநாள் அன்பளிப்புகள், சிறிய சேமிப்புகள் ஆகியவற்றை குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்காக தியாகம் செய்கின்றனர்.

பள்ளிகளில் சுற்றுலா அழைத்துச் சென்றால், அதில் பங்குபெற வேண்டும் என்ற ஆசை எல்லா குழந்தைகளுக்கும் வருவது இயல்புதான்.
ஆனால், அந்த ஆசையையும் சில ஏழைக் குழந்தைகள் புதைத்து விடுகின்றனர். பள்ளிகளில் சுற்றுலா ஏற்பாடு உள்ளது என்ற தகவலையே அவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பதில்லை.

இத்தகைய தியாகங்களால் குழந்தைகளுக்கு மன அழுத்தமும், வெறுப்பும் அதிகரிக்கிறது. மற்ற குழந்தைகளுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைப்பதை வறுமை தடுக்கிறது.
இருந்தாலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மன நிலையைப் புரிந்து நடந்து கொள்கின்றனர் என்பதுதான் ஒரே ஆறுதல்.

வாஷிங்டன்னில் வசிக்கும் ஒரு 10 வயது சிறுவன் தினமும் நடு இரவில் எழுந்து தனது தாய் பத்திரமாகத் தூங்குகிறாரா என்று கவனிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான்.
ஏனெனில், ''எனது தாய் கஷ்டப்பட்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நானும் அழுவேன்'' என்கிறான் அச்சிறுவன்.

இந்த ஆய்விற்குத் தலைமையேற்ற பேராசிரியர் கரோல் ஆன் ஹூப்பர், வயதுக்கு மீறிய பொறுப்புகள் திணிக்கப்பட்டால் குழந்தைகளின் எல்லாவித நலன்களும் பாதிப்பிற்குள்ளாகிறது என்கிறார்.
குழந்தைகளுக்கு பொம்மைகள் கிடைக்காதது, பெரியவர்களுக்கு தினமும் சமைத்த உணவு கிடைக்காதது ஆகியவையும் கூட வறுமைதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் நிலையே இப்படியென்றால், எத்தியோப்பியா, சோமாலியா போன்ற பஞ்சத்தில் அடிபட்ட ஆப்பிரிக்க நாடுகளின் நிலை?


இதில் மேலும் படிக்கவும் :