குழந்தைகளைத்தாக்கும் குடற்புழுக்கள் - இயற்கை மருத்துவம்!

Webdunia|
புழுக்கள் மற்றும் பிற குடல் ஒட்டுன்னிகள் உஷ்ண மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் மிகவும் சகஜமாக குழந்தைகள் உடலைத் தாக்கும் ஒரு நோய் வகையாகும். இவைகள் பெரும்பாலும் வாய் வழியாகவோ அல்லது கால் தோல் வழியாகவோ உடலில் நுழைகிறது. பெரியவர்களை விட குழந்தைகளின் குடலை புழுக்கள் அதிகம் நேசிக்கின்றன என்றே கூற வேண்டும்.

புழுக்களில் பலவகை இருந்தாலும் இந்தியாவில் பெரும்பாலும் வட்டப்புழுக்கள், கொக்கிப் புழுக்கள், நூல் புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்கள் ஆகியவற்றின் தாக்கமே அதிகம். வட்டப்புழுக்கள் 15 முதல் 25 செ.மீ. நீளம் வரை இருக்கும். நிறத்தில் வெண்மையான இப்புழு குழந்தைகளை அடிக்கடி தொற்றுகிறது. இப்புழுக்களின் முட்டைகள் மலம் வழியே வெளியேறும்.
இம்முட்டைகள் மண்ணில் பல மாதங்கள் உயிருடன் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கொக்கிப் புழுக்கள் ஒரு செ.மீ. நீளமுடையது. குடல் உட்பகுதி சுவரில் இவை ஒட்டிக் கொண்டிருக்கும். இவைகளால் ரத்தப்போக்கும், உடலில் நச்சுத்தன்மையும் ஏற்படும்.

நூற்புழுக்கள் என்பது குழந்தைகளின் மலத்தில் நாம் சாதாரணமாக காண்பது, பெண் வகை புழுவான இது ஒரு செ.மீ. நீளமுடையது. இரவுகளில் ஆசனவாய்ப் பாதைக்கு வந்து தன் முட்டைகளை இடும். நாடாப்புழுக்களால் 30 வகையான நோய்க்கிருமிகள் உடலைத் தாக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நோய் அறிகுறிகள்

வயிற்றுப் போக்கு, மூச்சுக்காற்றில் துர்நாற்றம், கண்களுக்கு கீழே கருவளையம், உணவின் மேல் தீராத ஆசை, ஓய்வின்மை, சில சமயங்களில் இரவுகளில் கெட்ட கனவுகள், ரத்த சோகை மற்றும் தலைவலி, சில குழந்தைகள் உறங்கும் போது பற்களை நறநறவென்று கடிப்பது போன்றவைகள் இதன் அறிகுறி.
வட்டப்புழுக்களால் குடல் மற்றும் நுரையீரல் அழற்சி ஏற்படலாம். மற்றபடி பேதி, குமட்டல், வாந்தி, எடையிழப்பு, காய்ச்சல், பதட்டம் ஆகியவை ஏற்படும்.

கொக்கிப்புழு தொற்றிய குழந்தைகள் பலவீனமாகவும், வெளிறியும் காணப்படும். ஊட்டச்சத்து குறைபாடு சார்ந்த நோய்களுக்கு இது இட்டுச் செல்லலாம். நூற்புழுக்களால் ஆசனவாய் பகுதியில் எரிச்சலும், குத்தல் போன்ற உணர்வும் இருக்கும்.
காரணங்கள் :

இந்த ஒட்டுணிகளின் முட்டைகள் உணவு அல்லது தண்ணீர் வழியாக குடலுக்குள் நுழைகின்றன. குறிப்பாக சரியாக சமைக்கப்படாத இறைச்சிகள் அபாயகரமானது. குழந்தைகள் மண்ணில் விளையாடும்போது கையை வாயில் வைக்கும்போதோ இப்புழுக்களின் முட்டைகள் உடலில் நுழைகின்றன. காய்கறிகளுக்கு உரமாக மனிதக் கழிவுகளை பயன்படுத்துவதும் அபாயகரமானதாகும். எனவே எதைச் சமைக்கும் போதும் அதை நன்றாக சுத்தம் செய்த பிறகு சமைப்பது அவசியம்.
நோய்க்கிருமி உள்ள நீரிலிருந்து சருமம் வழியாக கொக்கிப்புழுக்கள் நுழைகின்றன. நாடாப்புழுக்கள் சரியாக சமைக்கப்படாத இறைச்சியிலிருந்து உடலுக்குள் நுழைகிறது.

சிகிச்சை

நவீன மருத்துவம் அல்பென்டாசோல் உள்ளிட்ட ஒட்டுணி போக்கும் மருந்துகளை பரிந்துரை செய்கிறது. இது தற்காலிக நிவாரணத்தை அளிக்கலாம். இம்மருந்து மாத்திரைகள் சீரண நடைமுறைகளை பாதித்து பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்க வல்லது.
மாறாக இயற்கை மருத்துவம் குடல்பகுதியை பலப்படுத்தி ஒட்டுணிகளை வெளியேற்றுகிறது.

நோய்க்கால உணவு முறை (டயட்) ஆல் குடற்புழுக்களுக்கு இயற்கை சிகிச்சை தொடங்குகிறது. முதல் 2 நாட்களுக்கு பழ வகைகளை குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும். சுடுநீர் - எனீமாவுடன் அரை மூடி எலுமிச்சைச் சாற்றை தினமும் கொடுத்து வந்தால் குடல் உட்பகுதிகளில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றும். மேலும் சளிச்சவ்வு மற்றும் நூற்புழுக்களை குடலிலிருந்து அகற்றவும் இது உதவும். குழந்தைகளின் படுக்கைத் துணி மணிகளை தினமும் வெயிலில் காய வைப்பது அவசியம். மேலும் குழந்தை நல்ல காற்றோட்டமான அறையிலேயே இருக்க வேண்டும்.
இரண்டு அல்லது 3 நாட்கள் பழங்கள் கொடுத்தபிறகு, சமைத்த அல்லது பச்சைக் காய்கறிகளை பழங்களுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். இதை 3 நாக்ளுக்கு தொடரலாம். அதன்பிறகு ஏதேனும் கூழ் அல்லது பால் கஞ்சி கொடுக்கலாம். பிறகு சமச்சீரான உணவுப் பழக்கவழக்கத்திற்கு, பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் ரொட்டி கொடுத்து பழக்கலாம். இக்காலக்கட்டத்தில் வெண்ணை, க்ரீம், எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகள், இறைச்சி ஆகியவை அறவே தரக்கூடாது.
இந்த உணவு முறை புழுக்கள் முழுதும் வெளியேறும் வரை கடைபிடிக்கப்படுவது அவசியம். அடிவயிற்றில் ஈரக்குழைவான மண் அல்லது ஜில்லென்ற ஏதாவது ஒன்றை சிகிச்சையின் ஆரம்பக்கட்டத்தில் செய்யலாம். இது குறித்து முறையான விளக்கம் பெற உங்கள் இயற்கை மருத்துவரை அணுகுவது சிறந்தது.

வீட்டு வைத்தியம்
1. குடற்புழுக்களுக்கு தேங்காய் ஒரு பண்டைய மருந்து. காலை உணவிற்கு முன் ஒரு தேக்கரண்டி தேங்காய்த் துருவலை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு பிறகு 3 மணி நேரம் கழித்து 15 - 30 மிலி விளக்கெண்ணையுடன் 125-175 மிலி இளஞ்சூடான பாலை கலந்து அருந்துவதும் அவசியம். இதை புழுக்கள் அகலும் வரை செய்து கொண்டேயிருக்கலாம்.

2. பூண்டு 2 அல்லது 3 பல் நறுக்கி அதன் சாற்றை சிறிதளவு பழச்சாறு அல்லது காய்கனிச்சாற்றுடன் கொடுத்து வந்தால் நோயாளியை பாதிக்காமல் ஒட்டுணியை கொல்லும்.
3. அனைத்து ஒட்டுணிகளுக்கும் குறிப்பாக நூற்புழுக்களுக்கு காரட் ஒரு சிறந்த மருந்து. உணவுடன் காரட் மட்டும் கலந்து சாப்பிட்டு வந்தால் புழுக்கள் விரைவில் அழியும்.

4. பழுக்காத பப்பாளியின் சாற்றில் வட்டப்புழுக்களைக் கொல்லும் சத்து அதிகம். 7 முதல் 10 வயது குழந்தைகளுக்கு பப்பாளி சாறு ஒரு தேக்கரண்டியுடன் அதே அளவு தேனைக் கலந்து 2 தேக்கரண்டிகள் வெந்நீர் விட்டு கொடுத்து வந்தால் நல்லது. 3 மணி நேரம் கழித்து வெளக்கெண்ணெய், இளம் சூட்டுப்பாலுடன் கலந்து கொடுத்து வருவதும் அவசியம். இதை 2 நாட்களுக்கு அனுசரிக்கலாம்.
மேலும் முழுமையான இயற்கை சிகிச்சைக்கு உங்கள் இயற்கை மருத்துவரை ஆலோசிக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :