வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. ஆன்மிகம்
  4. »
  5. அருளுரை
Written By Webdunia

இறைவனை அறிவதற்கு ஒரே வழி - அன்னை

...நான் யார்?

இறைவன்

ஆனால், அதை உணரவேண்டுமானால், நீ உண்மையான உணர்வில் இருக்கவேண்டும். அது ஒரு புரட்சி, ஆனால் கால் விநாடியில் செய்துவிடக்கூடிய புரட்சி. அதைச் செய்ய பல ஆண்டுகள் ஆகவும் செய்யலாம், பல நூற்றாண்டுகள், பல பிறவிகள் கூட ஆகலாம்.

நீ யார் என இப்பொழுது எண்ணிக்கொண்டிருப்பது உண்மையான நீ அன்று: உன்னுடைய ஜீவனின் உண்மையை நீ இப்பொழுது உணரவில்லை என்பதை நீ உணரத் தொடங்கும்போது, அப்பொழுது இந்தக் கேள்வி எழுகிறது.

"ஆகக்கூடி இந்த நான் என்பது யார்? நான் என்று நான் உணர்வது ஒரு மாய உருவம் என்றால் நான் என்பது என்ன?"

இந்தக் கேள்வி மேலும் மேலும் தீவிரமடையும், மேலும் மேலும் நெருக்கமடையும், மேலும் மேலும் முனைப்பு பெறும். மெல்ல மெல்ல உன்னைப் பற்றி நீ கொண்டிருக்கும் உணர்ச்சி விநோதமாக, உண்மையல்லாதது போல, பொய் போலத் தோன்றும்.

"அப்படியனால் இந்த நான் என்ன?"

ஒரு கட்டத்தில் இந்தக் கேள்வி மிக அதிக ஒருமுனைப்புடனும் தீவிரத்துடனும் எழும், அப்பொழுது திடீரென ஒரு தலைகீழ் மாற்றம் ஏற்படும். ஒரு இமைப் பொழுதில் எல்லாம் மாறிவிடும், உனக்கு இதுவரை அவ்வளவு உண்மையாகத் தோன்றியது ஒரு பொய்த் தோற்றம் என்பதை நீ அறிந்துகொள்வாய், காண்பாய், அனுபூதியாக உணர்வாய்.

இந்தக் கணத்திற்காக நீ பல நாட்கள், பல மாதங்கள், ஆண்டுகள், நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிதிருக்கலாம். ஆனால், நீ உன்னுடைய ஆர்வத்தை தீவிரமாக்கினால், அதன் அழுத்தம் மிகவும் அதிகப்பட்டு, கேள்வியின் தீவிரம் மிகவும் வலுவடைந்து உன்னுடைய உணர்வில் ஏதோ ஒன்றைத் திசை திரும்பச் செய்கிற...

இந்த அனுபவம் மிக மிகத் தெளிவாக இருக்கும், மிக மிகக் கண் கூடாகத் தெரியும், சந்தேகத்திற்கே இடமிருக்காது.

சில சமயங்களில் என்னிடம் இப்படிக் கேட்கிறார்கள்: ஒருவன் தன்னுடைய சைத்திய புருஷனுடன் தொடர்பு கொண்டிருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி? "அல்லது ஒருவன் தான் இறைவனைக் கண்டுகொண்டதைத் தெரிந்துகொள்வது எப்படி?" உனக்கு அந்த அனுபவம் ஏற்பட்டுவிட்டது என்றால், விஷயம் அதோடு முடிந்தது, நீ அதன் பின் எந்தக் கேள்வியும் கேட்கமாட்டாய், அந்த வேலை முடிந்தது. அது அப்படி நிகழ்ந்தது என்று கேட்கமாட்டாய், அந்த வேலை முடிந்தது.

ஒருவன் இந்த வழியில் இறைவனை அடைய முடியுமா?

இதோபார், இறைவனை அறிவதற்கு ஒரே வழி அவனுடன் ஐக்கியமடைவதுதான். அது ஒன்றே ஒழி, வேறு வழி இல்லை.

ராமகிருஷ்ணர் அதைச் செய்ய மூன்றே நாளோ, மூன்று மணியோ, மூன்று நிமிடமோ ஆகலாம் என்று சொல்வார். மிகவும் மெதுவாகச் செல்பவர்களுக்கு மூன்று நாள், அதைவிடச் சிறிது உஷாராக இருப்பவர்களுக்கு மூன்று மணி, அதில் தேர்ந்தவர்களுக்கு மூன்று நிமிடம்.

எதுவுமே செய்யாமலிருந்தால் மூன்று நாளா?

இல்லை, ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டியதில்லை. இறைவனுடன் ஐக்கியப்பட்டிருப்பதற்கு ஒன்றுமே செய்யாமலிக்க வேண்டியது அவசியமில்லை. உன்னால் ஒன்றும் செய்யாமல், அப்படியே அசையாமல் உட்கார்ந்திருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்ததே.

உன்னால் அதைச் செய்ய முடிந்தால், எல்லாத் தேவைகளையும் மறந்துவிட்டு மூன்று நாட்கள் அப்படியே அசையாமலிக்க உன்னால் முடியுமானால் நீ ஏற்கனவே அசாதாரணமான பூரண நிலையை அடைந்துவிட்டாய் என்று அர்த்தம்.

இல்லை, ராமகிருஷ்ணர் அதைச் சொல்லவில்லை: மனம் இறைவன் மீது மட்டுமே ஒருமுனைப்பட்டிருத்தலைச் சொன்னார். அவர் அதை மூன்றே நிமிடங்களில் செய்துகாட்டினார். தாம் சொல்வது உண்மை என்பதை எடுத்துக்காட்ட அந்த மனிதர் முன்னாலேயே செய்து காட்டினார். அவருக்கு அதைச் செய்ய மூன்று நிமிடத்திற்கு மேல் ஆகவில்லை.

அப்படியேதான், அந்த அனுபவம் வராமலிக்க காரணம் ஒரு முகப்படும் பழக்கம் இல்லாததுதான். பிறகு - ஆங்கிலத்தில் "One Pointedness" என்கிறார்களே அது - இச்சா சக்தியில் ஒருமை இல்லாதிருத்தல், நீ ஒரு நிமிடத்திற்கு அதை "விரும்புகிறாய்" அல்லது இரண்டு நிமிடத்திற்கு, கால் மணி நேரத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு, அதன்பிறகு வேறு பல விஷயங்களைக் கேட்கிறாய்.

சில விநாடிகள் அதைப்பற்றி "நினைக்கிறாய்" பிறகு வேறு ஆயிரம் விஷயங்களைப் பற்றி நினைக்கிறாய். ஆகவே உனக்கு எல்லையற்ற காலம் ஆவது இயற்கைதானே.

அவ்வாறு முயலும்போது உன்னுடைய முயற்சிகளைச் சேர்த்து வைத்துக்கொண்டே போகவும் முடியாது. நீ இறைவனை நினைக்கும் ஒவ்வொரு நினைப்பிற்கும் ஒரு மணல் பொடியை எடுத்து ஓரிடத்தில் வைத்தால், கொஞ்சம் கொஞ்சமாக அது ஒரு மலைபோல் ஆகவிடும் என்பதுபோலும் நடப்பதில்லை. அப்படி அது ஒன்றுதிரள்வதில்லை, அப்படி குவிவதில்லை, உன்னால் அப்படிக் கூட்டிச் சேர்த்து அளவைக் கூட்டி (Quantitatively) முன்னேற முடியாது - தீவிரத்தின் மூலமே, தன்மையை உயர்த்துவதன் மூலமே (Qualitatively) முன்னேற முடியும்.

ஆம், அதை உன்னுள் செய்ய நீ கற்றுக்கொள்ள முடீயும், அந்த வகையில் மட்டுமே நீ செய்வது கணக்கில் சேரும். மணற்குன்றில் மணற்பொடிகள் சேர்வது போல் சேராது.

இல்லையெனில் நீ சிறிது தந்திரசாலியாக இருந்தால் போதும். நீ இப்படிச் சொல்லலாம். "நல்லது, நான் ஒவ்வொரு நாளும் ஒரு டஜன் தடவை இறைவனை நினைப்பேன்". பிறகு அதை அப்படியே குறித்து வைத்துக்கொண்டு போனால், சிறிது காலத்திற்குப் பின் அது ஒரு சிறு குன்றாகிவிடும்.

நாம் இறைவனுக்கே சொந்தம், இறைவனே நம்மிடம் வேலை செய்கிறான் என்பதைத் திட்டவட்டமாக உணர வழி என்ன?

நீ உன்னுடைய மனத்தைக்கொண்டு உணரக்கூடாது (ஏனெனில் நீ சிந்திக்கலாம், ஆனால் அது தெளிவில்லாமல் இருக்கும்) உன்னுடைய புலனுணர்வு (sense feeling) மூலம் உணர வேண்டும். மனத்தால் விரும்புவதில்தான் அது தொடங்கும் என்பது உண்மை, ஏனெனில் அதுதான் நாம் முதலாவது அறிவது.

பிறகு உனக்கு இங்கே (இதயத்தைக் காட்டி) ஓர் ஆர்வம் தோன்றும், அது சுடரோங்கி மனத்தில் சிந்தித்த அதை அனுபூதியாக்க உன்னை உந்தும். ஆனால், நீ அதை உண்மையாக விரும்பினால் நீ அதை உள்ளத்தில் உணரவேண்டும்...

அந்த நிலையை அடைவது எப்படி?

அதற்காக ஆர்வமுறு, இச்சாசக்தியைப் பயன்படுத்து, சுயநலத்தை படிப்படியாக விட முயற்சி செய், உன்னை மறந்துவிட்டு அடுத்தவர்களுக்கு இனியவனாக இருக்க வேண்டும் என நான் சொல்லவில்லை, அதுவன்று: நீ ஒரு தனி ஆள், தனிப்பட்ட ஓர் உயிர், மற்றெல்லாவற்றிலிருந்து பிரிந்து தனித்து இருக்கும் ஒன்று என்னும் உணர்வு தேயவேண்டும்.

எல்லாவாற்றிலும் மேலாக, உள்ளே உள்ள இந்த அனற்கொழுந்து, ஆர்வக் கனல், ஒளி வேண்டும் என்னும் விருப்பம் எப்படிச் சொல்வது, ஒருவகையான ஒளி பொருந்திய உற்சாகம் உன்னைப் பற்றிக்கொள்கிறது, இறைவனுக்கு தன்னைக் கொடுத்துவிட வேண்டும், இறைவனில் கரைந்துவிட வேண்டும், இறைவனிலேயே உயிர்க்க வேண்டும் என்னும் மறக்க முடியாத ஒரு தேவை.

இறையனுபூதி அடைதல் என்பதன் உண்மையான பொருள் என்ன?

அதன் பொருள் உன்னுள் அல்லது உனது ஆன்மீகச் சிகரங்களில் இறைவனது சாநித்தியத்தை உணர்தல், அவனுடைய சாநித்தியத்தை உணர்ந்ததும் அவனுக்கு உன்னை முற்றிலுமாகச் சரணாகதி செய்தல், அதன்மூலம் அவனுடைய சித்தத்தைத் தவிர உனக்கென தனி இச்சை இல்லாத நிலை பெறுதல், இறுதியில் உனது உணர்வை அவனுடைய உணர்வுடன் ஐக்கியமடையச் செய்தல், அதுவே இறையனுபூதி அடைதல் ஆகும்.

நம்முள்ளே இறைவனைக் காண்பது எப்படி?

நான் இப்பொழுது அதைத்தான் சொன்னேன். முதலாவது, அதுவே உன்னுடைய வாழ்வின் மிக முக்கியமான காரியமாகக் கருதி, அவனைத் தேடவேண்டும், அதன்மேல் இறைவனைக் காணவேண்டும், என்னும் சங்கற்பம் இடைவிடாது இருக்க வேண்டும், ஆர்வம் இடைவிடாது இருக்க வேண்டும், அதில் முழுக் கவனமும் இடைவிடாது இருக்க வேண்டும், வேறெந்த விருப்பமுமின்றி இறைவனைக் காணவேண்டும் என்பதே உனது ஒரே விருப்பமாக இருக்க வேண்டும், அப்பொழுது நீ அவனைக் காண்பாய்.

உனது வாழ்க்கையில் ஐந்து நிமிடங்கள் மட்டும் அதைப்பற்றி நினைத்துவிட்டு, முக்கால் மணி நேரம் வேறு விஷயங்களில் நீ முனைந்தாயானால் நீ வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இல்லாதவன். எப்படியும், பல பிறவிகள் தேவைப்படும். அது ஏதோ பொழுதுபோக்காக இருக்கக்கூடாது, அதுவே உனது ஜீவனின் ஒரே வேலையாக இருக்க வேண்டும், நீ இருப்பதே அதற்காக இருக்க வேண்டும்.