1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By Sasikala

அருட்பெரும் ஜோதி வள்ளலார் அவர்களின் உபதேசங்கள்

அருட்பெரும் ஜோதி வள்ளலார் அவர்களின் உபதேசங்கள்

சன்மார்க்க ஒழுக்கம்


 
 
சன்மார்க்கப் பெருநெறியின் ஒழுக்கங்கள் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என நான்கு வகைப்படும்.
 
இந்திரிய ஒழுக்கம்
 
நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல், கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமாய் பாரதிருத்தல், ருசியின் மீது விருப்பமின்றியிருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல் முதலியவாம்.
 
கரண ஒழுக்கம்
 
சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்த வகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற் குறித்த இடத்தில் நிறுத்துதல், பிறர் குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களால் உண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவமயமாயிருத்தல், பிறர்மேல் கோபியாதிருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைப் கோபித்தல், அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.
 
ஜீவ ஒழுக்கம்
 
எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றத் தானாக நிற்றல் முதலியவாம்.
 
ஆன்ம ஒழுக்கம்
 
எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்துமுள்ள ஆன்மாக்களீடத்தும் இரங்கி, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.