மகிழ்ச்சியாக வாழ இந்த வாழ்க்கையே போதும் என சொல்கிறார் சத்குரு!.. பர்வீன் சுல்தானா சிறப்புரை!...
isha
மகிழ்ச்சியாக வாழ இந்த வாழ்க்கையே போதுமானது என கிருஷ்ண லீலா நூல் மூலம் நமக்கு உணர்த்துகிறார் சத்குரு என சென்னையில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் பிரபல பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசினார்.
இவ்விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம். முரளி, அகமதாபாத் வருமான வரித்துறை ஆணையர் கவிதா ராமானுஜம், 'கிருஷ்ண லீலா' நூலை தமிழில் எழுத்தாக்கம் செய்த பிரபல எழுத்தாளர் சுபா, உலகத்தமிழ்ச் சங்கத்தின் இயக்குனரும் பிரபல பேச்சாளருமான முனைவர் பர்வீன் சுல்தானா மற்றும் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, நூல் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து சிறப்புரை ஆற்றினர்.
பர்வீன் சுல்தானா பேசுகையில், “இந்த 'கிருஷ்ணலீலா' நூலின் மூலமாக வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், மகிழ்ந்து இருப்பதற்கு இந்த வாழ்க்கையே போதுமானது என நமக்கு உணர்த்துகிறார் சத்குரு. கிருஷ்ணனிடம் எல்லா குணங்களும் இருந்தன. அவன் சூது செய்வான், சூழ்ச்சி செய்வான், ஆடுவான், பாடுவான், மகிழ்ந்திருப்பான். அவனிடத்தில் இல்லாத ஒரே ஒரு குணம் 'மெத்தனம்'. 'அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று தள்ளிப்போடும் குணம் அவனிடம் இல்லை. ஒவ்வொரு வினாடியும் முழுக்க முழுக்க உணர்வோடும், விழிப்புணர்வோடும் இருந்தவன் கிருஷ்ணன் என்பதை சத்குரு இந்தப் புத்தகத்தில் அழகாக சுட்டி காட்டியிருக்கிறார். மேலும் இந்த நூல் கிருஷ்ணனின் மிக முக்கியமான லீலை பெண்களுக்கு மிக அற்புதமான, பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை அவன் தொடர்ந்து தந்து கொண்டே இருந்தான் என்பதை மிக அழகாகப் பேசுகிறது.” எனக் கூறினார்.
கிருஷ்ண லீலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கிடைத்த அதே அனுபவம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று சத்குரு இதனை புத்தகமாக கொண்டு வர எண்ணினார். அதனை தமிழில் எழுதும் பொறுப்பை எங்களிடம் தந்தார்கள். கிருஷ்ணனைப் பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்தப் புத்தகத்தை நிச்சயமாகப் படித்தே தீர வேண்டும். நம் அனைவரையும் கிருஷ்ணனாக மாற்றுவதுதான் இந்த 'கிருஷ்ண லீலா' புத்தகத்தின் நோக்கம். 'நம்மால் கிருஷ்ணனாக மாறிவிட முடியுமா?' என்று நீங்கள் கேட்டால், 'இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்துப் பாருங்கள்' எனக் கூறுவேன்” எனக் கூறினார்.
அந்த லீலா நிகழ்ச்சியில் கிருஷ்ணரின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து சத்குரு ஆற்றிய உரைகளை, பிரபல எழுத்தாளர் சுபா தமிழில் எழுத்தாக்கம் செய்தார். இது 'ஈஷா காட்டுப்பூ' மாத இதழில் 150-க்கும் மேற்பட்ட மாதங்கள் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொடர் தற்போது ஈஷா லைஃப் சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது. அதன் முதல் பாகம் இன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கிருஷ்ணர் குறித்து சத்குரு கூறுகையில், “கிருஷ்ணனை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், சமநிலை தவறாத மூளை, அதே சமயம் கண்மூடித்தனமாய் உருகும் இதயம் இரண்டும் இருந்தால்தான் சாத்தியம்” எனக் கூறியுள்ளார்.
அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள இந்த 'கிருஷ்ண லீலா' புத்தகம் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தகக் கடைகளிலும், பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஈஷா லைஃப் போன்ற இணையதளங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
