செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 20 மே 2015 (18:14 IST)

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை பெற ஜெ. தகுதியற்றவர் - டிராபிக் ராமசாமி மனு

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றத்தில் சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
 
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
 
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ’கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
 
இந்த தவறால், சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சார அளவு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலைபெற தகுதியற்றவர்.
 
மேலும், ஜெயலலிதா தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப் பரிமாற்றங்களை பெங்களூரு உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. ஜெயலலிதாவுக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும்கூட, கவனத்தில் கொள்ளப்படவில்லை.
 
எனவே, ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.