வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 15 மே 2014 (11:58 IST)

வெப்ப நீர் குழாய் வெடிப்பு: நாளை கூடங்குளத்தில் கடையடைப்பு போரட்டம்

கூடங்குளம் அணு உலையில் நேற்று வெப்ப நீர் குழாய் வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதனைக் கண்டித்து நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங் குளத்தில் ரூ.16 ஆயிரம் கோடி செலவில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது நிலவரப்படி 900 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
 
இதற்கிடையே அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழுவினர் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அணு உலையில் மின் உற்பத்தி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் நேற்று முதல் அணு உலையில் வெப்பநீர் செல்லும் குழாய் வெடித்ததில் 3 ஊழியர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
பின்னர் தற்போது மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அணு சக்திக்கு எதிரான போராட்டக்குழுவினர் அணு உலையில் தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தி உள்ளதால் விபத்து ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர்.
 
அணு உலையில் ஏற்பட்டுள்ள விபத்தால் கூடங்குளம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம், நாம் தமிழர் கட்சி ஆகியவை அணு உலையில் ஏற்பட்ட விபத்தை கண்டித்து நாளை கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்து உள்ளது.
 
மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க செயலாளர் ரவி, நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் இன்று காலை கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் உள்ள கடைகளில் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ்கள் வினியோகம் செய்தனர்.
 
இதைப்போல அவர்கள் மீனவர்களிடமும் ஆதரவு கேட்டுள்ளனர்.