வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 6 மே 2014 (18:34 IST)

விமான நிலையங்கள் மீது கார் குண்டு தாக்குதலுக்கு திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

தென் இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மீது கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையொட்டி அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை விமான நிலையம் ஏற்கனவே 'ரெட் அலாட்'டில் உள்ளது. அதனால் அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில் படை, அதிரடிப் படை, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தற்போது கார் குண்டு தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து மேலும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் உள்ளேயும், வெளிப்பகுதியிலும் தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
விமான நிலையத்தின் 4 பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் மீது பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிக்கிறார்கள்.
 
இதுதவிர தமிழக சிபிசிஐடி, நுண்ணறிவுப் பிரிவு, மத்திய உளவுப்பிரிவான ஐ.பி., 'ரா' பிரிவினரும் விமான நிலையம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.
 
உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் கார்கள், உடமைகள் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன. வெடிகுண்டு கண்டுபிடிக்கும் அதிநவீன கருவிகள் கொண்டு எல்லா வாசல்களும் பரிசோதிக்கப்படுகிறது.
 
விமான நிலையத்தில் நுழையும்போது ஒவ்வொரு வாகனத்திற்கும் டோக்கன் வழங்கப்படுகிறது. மேலும் நுழையும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவு செய்யப்படுகிறது.
 
இரண்டு விமான நிலையங்களுக்கு தனித்தனியாக செல்லக்கூடிய வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி ஒரே பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
 
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வாகனங்கள் உள்ளே நுழைவது முதல் பார்க்கிங் செய்வது வரை அனைத்தும் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையத்தின் பாதுகாப்பு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
 
தேவையற்ற பார்சல்கள், பொருட்கள், பெட்டிகள் எங்காவது கிடக்கிறதா என காவல்துறையினர் விமான நிலைய பகுதி முழுவதும் சோதனையிடுகிறார்கள்.