வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: ஞாயிறு, 27 ஏப்ரல் 2014 (17:38 IST)

மோடி எங்களது குடும்பத்தில் ஒருவர் - லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று கூறியுள்ளார்.
 
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த 13 ஆம் தேதி சென்னைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். 
 
இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி தன்னை சந்தித்தது பற்றி ரஜினிகாந்திடம் கேட்ட போது, ‘‘மோடி எனது நெருங்கிய நண்பர் அந்த வகையில் என்னை சந்தித்தார்’’ என்று கூறினார். 
 
இது தொடர்பாக ரஜினிகாந்தின் மனைவி லதா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 
 
ரஜினி-மோடி சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘நரேந்திரமோடி ரஜினியின் மிக நெருங்கிய நண்பராவார். ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது மோடி நேரில் வந்து பார்த்தார். இப்போது அவர் எங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து எங்களை சந்திக்க உள்ளார். இதனால் நாங்கள் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவபடுத்திவிட்டார்’’ என்று கூறினார். 
 
24 ஆம் தேதி ஓட்டு பதிவின்போது ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லாமேரி கல்லூரியில் முதல் ஆளாக சென்று ஓட்டு போட்டார். இதுபற்றி லதாவிடம் கேட்டபோது ‘‘ரஜினி முதல் ஆளாக சென்று ஓட்டுபோட்டதற்கு எந்த திட்டமும் இல்லை. அவர் எப்போதும் காலையிலே சென்று காத்திருந்து ஓட்டு போடுவார். அன்றும் அதேபோல் முன்கூட்டி சென்றார். அவர் முதல் ஓட்டு போடும் நிலை ஏற்பட்டது. ஆனால் அது தற்செயலாக நடந்தது’’ என்று கூறினார். 
 
வருகிற 9 ஆம் தேதி வெளியாக உள்ள ரஜினியின் கோச்சடையான் படம் பண முடையால் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது. இது பற்றி அவரிடம் கேட்டபோது, ‘‘படம் வெளியாவதில் எல்லாமே நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. நான் முதல் நாளில் முதல் காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து பார்க்க உள்ளேன். இது எனக்கு சிறப்பான தருணம்’’ என்று கூறினார்.