1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By k.N.Vadivel
Last Modified: சனி, 17 அக்டோபர் 2015 (04:55 IST)

முறைகேடாக இறக்குமதியாகும் சீன பட்டாசுகளை தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ

முறைகேடாக இறக்குமதியாகும் சீன பட்டாசுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ல சிவகாசி பட்டாசு தொழிலுக்குப் பெயர் பெற்ற நகரம் ஆகும். இந்திய நாட்டின் 80 சதவிகித பட்டாசு தேவையை இந்த சிவகாசியில்  உற்பத்தியாகும் பட்டாசுகள்தான் நிறைவேற்றி வந்தது.
 
ஆனால், சீனப் பட்டாசு இறக்குமதியால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழியும் நிலையில் உள்ளது. சீன பட்டாசு இறக்குமதியால், பட்டாசு விற்பனை 35 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.. பட்டாசு தொழில் நலிந்துபோய் உள்ளது. இதனால், பட்டாசு வணிக முகவர்கள், பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், நுகர்வோர் என அனைத்து தரப்பினரும்  பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
சீன பட்டாசு இறக்குமதிக்கு பெயரளவுக்கு மட்டுமே தடை உள்ளது. வேறு பொருட்களின் பெயரில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களில் இரண்டாயிரம் கண்டெய்னர்களில் சீன பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. மேலும், பல கண்டெய்னர் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
சட்ட விரோதமாக கப்பல்கள் மூலம் இந்தியா வரும் சீன பட்டாசுகளை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுக்குகளுக்கு உண்டு.
 
பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு வரிவருவாய் ஈட்டித்தரும் குட்டி ஜப்பானுக்கு சீன பட்டாசுகள் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 
எனவே, சீன பட்டாசு இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டிப்பான முறையில் செயல்படுத்த வேண்டும். நலிந்து வரும் சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கயை உடனே எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.