வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

மாணவிகளிடம் சில்மிஷம் செய்த பேராசிரியருக்கு தர்ம அடி

FILE
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் 2 பேரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பேராசிரியரை உறவினர்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் தஞ்சாவூர் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த கிளாரா, வாணிஸ்ரீ (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய 2 மாணவிகள் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் 2 ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்த 2 மாணவிகளையும் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் மோகன் (வயது 55) என்பவர் அடிக்கடி கல்லூரி நேரம் முடிந்த பிறகு வீட்டில் தனி வகுப்பு நடத்துவதாக கூறி வரச்சொல்லி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தனர். நேற்று அந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும், உறவினர்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர்.

கல்லூரி நேரம் முடிந்த பிறகு பேராசிரியர் மோகன் வழக்கம்போல் அந்த 2 மாணவிகளையும் தனியாக அழைத்தார். பெற்றோர்கள் ஆலோசனைப்படி அந்த மாணவிகள் பேராசிரியர் மோகன் இருந்த அறைக்கு சென்றனர். அங்கு, பேராசிரியர் மோகன் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

அறைக்கு வெளியே மறைந்திருந்து கவனித்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்து அந்த அறைக்குள் நுழைந்து பேராசிரியர் மோகனை சரமாரியாக தாக்கி தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர், அவரை அங்கிருந்து இழுத்து வந்து அண்ணாமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக ஒரு மாணவி போலீசில் புகார் கொடுத்தார். பேராசிரியர் மோகனிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மோகனை கைது செய்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.