செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 7 மே 2014 (13:59 IST)

மறு வாக்குபதிவுக்கு எதிர்ப்பு: ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

சேலம் மற்றும் நாமக்கல்லில் உள்ள 2 வாக்குச்சாவடிகளுக்கு நடைபெறவுள்ள மறு வாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை தேர்தல் கமிஷனுக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
 
அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 6.5.2014 அன்று ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 213 ஆம் நம்பர் ஓட்டுச்சாவடியிலும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 37 ஆம் நம்பர் ஓட்டுச்சாவடியிலும் 8.5.2014 (வியாழக்கிழமை) மறுதேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 24.4.2014 அன்று தேர்தல் நடந்து முடிந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஓட்டுக்கள் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின் பேரில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் 12 நாட்களுக்கு பிறகு திடீரென 2 வாக்குச் சாவடிகளிலும் மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மறுதேர்தலுக்கு உத்தரவிடப்பட்டுள்ள சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 213 ஆம் நம்பர் ஓட்டுச்சாவடியில் 77.61 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.
 
அதுபோக நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட 37 ஆம் நம்பர் ஓட்டுச்சாவடியில் 80.26 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. இந்த இரு வாக்குச் சாவடிகளிலும் அரசியல் கட்சிகளாகவோ, அல்லது வேறு நபர்களாகவோ எந்த எதிர்ப்பும் எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை.
 
இப்படி இருக்கும் போது தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை ஏற்க முடியாதது. மறு ஓட்டுப்பதிவுக்கு 48 மணிநேர அவகாசம் கூட கொடுக்கப்படாதது தேவையில்லாதது.
 
தேர்தல் ஆணையத்தின் இத்தகை தாமதமான நடவடிக்கை, நேர்மையான தேர்தல் பணியை சந்தேகத்துக்கு உள்ளாக்கும். மறு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் போதுமான அவகாசம் கொடுக்கவில்லை.
 
மேலும் 2 வாக்குச்சாவடிகளிலும் அதிக வாக்காளர்கள் வருவதற்கேற்ப போதுமான அளவுக்கு விளம்பரமும் செய்யப்படவில்லை.
 
இவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதி மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு எதிராக உள்ளது. ஆகையால் இந்த மறு வாக்குப்பதிவுக்கு அதிமுக தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்கிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.