வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 19 மே 2014 (12:08 IST)

பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் வருத்தம்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு பத்திரிக்கையாளார்கள் தாக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததையடுத்து மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
 
இந்த சந்திப்பின் போது, தோல்விக்கு பொறுப்பு ஏற்று தான் திமுக பொருளாளர் பதவியை விட்டு விலகப் போவதாக தெரிவித்தார். இந்த செய்தி பரவியதால் கோபாலபுரம் வீட்டின் முன்பும், ஆழ்வார் பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பும் திமுகவினர் திரண்டனர்.
 
இதையடுத்து ஏராளமான தொலைக்காட்சி, பத்திரிகையாளர்கள் கேமராக்களுடன் ஸ்டாலின் வீட்டின் முன்பு குவிந்தனர். அப்போது அங்கிருந்த திமுகவினர் சிலர் ‘திமுக தோல்விக்கு டி.வி., பத்திரிகைகள்தான் காரணம் என்று கூறி அவர்களை தாக்கினார்கள். இதில் நிருபர்கள் காயம் அடைந்தனர். 2 கேமராக்கள் உடைக்கப்பட்டன.
 
பத்திரிகையாளர்கள் திமுகவினரால் தாக்கப்பட்டதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
 
இது போல, திமுக தலைமைக் கழகம் சார்பில், திமுக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகியதாக வந்த செய்தியை அடுத்து, கழகத் தோழர்கள் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் பெருமளவில் குழுமிருந்தனர். அப்போது, செய்தியாளர்கள் சிலர் மு.க.ஸ்டாலின் மீது தவறுதலாக விமர்சனங்கள் வைத்ததாக புரிந்து கொண்டு, அவர்களோடு கழகத் தோழர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
 
அங்கே கூடியிருந்த கூட்டத்தினருடன் தீய சக்திகள் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம். எனினும் பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்காக திமுக அமைப்புச் செயலாளர் என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.