வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 31 மார்ச் 2014 (16:31 IST)

திமுக – அதிமுகவை பாஜக விமர்சிக்காதது ஏன்? - இல.கணேசன் விளக்கம்

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக திமுக மற்றும் அதிமுகவை விமர்சிப்பதற்கு காரணம் என்ன? என்பதற்கு விளக்கம் அளித்தார்.
L.Ganesan - BJP
காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தலுக்கு முன்பு ஞானோதயம் பிறந்ததை போல இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் அணுகுமுறைக்கு வருத்தம் அடைவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் மக்கள் காங்கிரசை நம்பத் தயாராக இல்லை.
 
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்த ஊழல்களும் நிர்வாக சீர்கேடுகளும் ஏராளம். மீண்டும் ஒரு தவறு செய்ய மக்கள் வாய்ப்பு தரமாட்டார்கள்.
 
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவையும், அதிமுகவையும் பாரதீய ஜனதா கட்சி விமர்சிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

இந்தத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தல். பிரதமராக வேண்டியது மோடியா? அல்லது பிறகு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கக் கூடிய ராகுலா என்று முடிவு செய்ய வேண்டிய தேர்தல். ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயலலிதாவா? அல்லது கருணாநிதியா என்பதுபோல் மக்களை திசை திருப்பி வருகிறார்கள்.
 
எனவே நாங்கள் அப்படி திசை திருப்ப விரும்பவில்லை. நாங்கள் ஜெயித்தால் நாட்டுக்கும், தமிழகத்துக்கும், தொகுதிக்கும் என்ன செய்வோம் என்று பேசுவதை மட்டும் கொள்கையாக வைத்துள்ளோம்.
 
இப்போது விஜயகாந்த், வைகோ மற்றும் பாமக தலைவர்கள் மோடியை பிரதமராக்கவும், பாரதீய ஜனதாவை ஆதரித்தும் பிரச்சாரம் செய்வது பெருமையாக உள்ளது.
 
தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தேவையற்ற அதீதமான முறையில் எடுக்கும் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இது அமைதியான தேர்தலுக்கு குந்தகம் விளைவிக்கும்.
 
அதேபோல் ஏ.கே.மூர்த்தியின் பிரச்சாரத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதலும் கண்டிக்கத்தக்கது. எதிர் அணியினர் விரக்தியின் விளிம்பில் இருப்பதால் இவ்வாறு செயல்படுகிறார்கள்.
 
ராமதாஸ் உடல்நலம் சரியில்லாததால் இன்னும் பிரச்சாரம் செய்ய வரவில்லை. மோடி பயண திட்டங்களை வானதி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் வகுத்து வருகிறார்கள்.
 
இவ்வாறு இல.கணேசன் கூறினார்.