வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

திமுக பிரமுகர் மனைவி முன் குத்திக்கொலை: சாவகாசமாக தப்பிச் சென்ற குற்றவாளிகள்

FILE
திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் மனைவி கண்எதிரேயே திமுக பிரமுகர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை திருவான்மியூர் மங்கல்ஏரி பகுதியை சேர்ந்தவர் ஜெ.கந்தன்(வயது 40). தென்சென்னை மாவட்ட தி.மு.க. பிரதிநிதியான இவர், அந்த பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்தார். இவர் மீது கொலை உள்பட 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 2 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவியும், சங்கீதா, தேஜா, மோனிகா என 3 மகள்களும் உள்ளனர்.

மங்கல்ஏரி தெரு மிகவும் குறுகியதாக இருக்கும். நேற்று மாலை கந்தன், தனது வீட்டில் இருந்து தெரு வழியாக வெளியே வந்தார். அப்போது 3 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்தனர். அவர்களிடம் கந்தன், “நீங்கள் யாருடா?” என கேட்டு சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவரது மனைவி தேவி ஓடிவந்தார்.

ஆனால் அதற்குள் அந்த 3 பேரும், கந்தனின் கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். மனைவியின் கண்எதிரேயே ரத்த வெள்ளத்தில் கந்தன் மயங்கி விழுந்தார். இதை கண்டதும் 3 பேரும் சாவகாசமாக கத்தியை துணியால் சுற்றிக்கொண்டே கிழக்கு கடற்கரை சாலைக்கு நடந்து சென்று அருகில் உள்ள திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்குள் சுவர் ஏறிக்குதித்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இதை அந்த பகுதியில் இருந்தவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். ஆனால் அவர்களை யாரும் தடுக்கவும் இல்லை. கந்தனை குத்திக்கொன்று விட்டு நடந்து சென்றவர்களை பிடிக்கவும் முன்வரவில்லை. மாறாக கத்தியுடன் வந்தவர்களை கண்டு அலறியடித்து ஓடினார்கள்.

தெருவில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கந்தனை, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இருந்த மருத்துவர்கள் உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறிவிட்டனர்.

இதையடுத்து உயிருக்கு போராடிய கந்தனை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கந்தனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் தென்சென்னை இணை ஆணையர் திருஞானம், திருவான்மியூர் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கந்தன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தும் கிழக்கு கடற்கரை சாலை மங்கல்ஏரி பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதி குறுகிய சாலை என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கந்தன் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். இது தொடர்பாக திருவான்மியூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.