செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: முழு விவரம்

திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.
FILE

அறிக்கையில் கூறியிருக்கும் அம்சங்களாவன,

முழுமையானதும் உண்மையானதுமான கூட்டாட்சி முறையை மாநில சுயாட்சி அடிப்படையில் அமைத்திட வேண்டுமென்பதும் அதற்கேற்ற வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பது திமுகவின் கொள்கையாகும்.

மாநில சுயாட்சிக் கொள்கை வெற்றி பெறவும், தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற திமுக தொடர்ந்து பாடுபடும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகள் வழங்கியுள்ள உரிமைகளின்படி எந்த மதத்தையும் கடைப் பிடிப்பதற்கும், சுதந்திரமாகப் பரப்புவதற்கும் பொதுநலனுக்கு ஒப்ப வளர்ப்பதற்கும் எவருக்கும் உரிமை உண்டு என்பதில் கழகம் இன்று போல் என்றும் உறுதியாக இருக்கும்.

இட ஒதுக்கீடு அதிகபட்சம் 50 சதவிகிதம்தான் இருக்க வேண்டும் என்பதும், பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியாக மேல் தட்டு மக்கள் என்று கருதப்படுவோர்க்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதும் சமூக நீதிக்குப் புறம்பானவை என்பதால் அதனை மாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வர திமுக வலியுறுத்தும்.

அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கைக்கேற்ப இட ஒதுக்கீட்டு விகிதாசாரத்தை அந்தந்த மாநிலங்களே நிர்ணயித்துக் கொள்வதற்குரிய வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதோடு, அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், மாநில அரசு மேற்கொண்டுள்ள விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

பொருளாதார நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15 மற்றும் 16-க்கு ஏற்புடையதல்ல. எனவே அவ்வப்போது மாறுபடும் தன்மையை பொருளாதார நியதிகளை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு செய்வது, சமூக நீதி கோட்பாட்டிற்கு மாறுபட்டதாகையால், அதனை திமுக தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும்.

முழுமையான சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனடியாக எடுத்திட வற்புறுத்தும்.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் குழந்தைகளுக்கு அகில இந்திய அளவில், அவர்களுடைய ஆண்டு வருமானத்தைப் பொறுத்து, கல்லூரிப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்க திமுக முயற்சி மேற்கொள்ளும்.

ஆதிதிராவிட, பழங்குடி இன, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்களின் உடல்நலம் பேண ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்குத் "தனி சுகாதாரத் திட்டம்" உருவாவதற்கு திமுக பாடுபடும்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டதைப் போல பெண்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இந்நிலையில் மகளிர் பாதுகாப்புக்கான உரிய சட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்தி, இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் திந்திட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால் பல அரசுத் துறைகளும் - பொது நிறுவனங்களும் இந்த இட ஒதுக்கீட்டினை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. மாற்றுத் திறாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக மத்திய அரசு பின்பற்ற வேண்டும்.

அரவாணிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையில், அவர்களுக்கு திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் அகில இந்திய அளவில் வழங்க வேண்டும்.

மண்டல் கமிஷன் அறிக்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்ற பரிந்துரையை செயல்படுத்திட வேண்டுமென இந்திரா சவ்கானி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டதைப் போல, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தும்.

மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைளை மேற்கொள்ள மத்திய அரசை விலயுறுத்தும்.

தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்புகளை எவ்விதத் தடைகளுமின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக, கல்லூரிக் கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம் உள்பட அனைத்தையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் உதவி தொகையளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு வழங்கிய தனி இட ஒதுக்கீடு போன்று வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு வேலைகளுக்கான நேர்காணலுக்குச் செல்லும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பு மாணவர்களுக்கு அவர்களுடைய பயணச் செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும்.

குடிசைகளிலே வாழ்ந்து வருகின்ற தாழ்த்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் அனைவருக்கும் அடுத்த 5 ஆண்டு காலத்திற்குள் தரமான வீடுகள் கட்டித் தருவதற்கு மத்திய அரசு, மாநில அரசின் நிதிப் பங்கேற்புடன் செயல் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும். இந்த வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு தற்போது ரூ.1 லட்சம் என்று உள்ளதை ரூ.3 லட்சம் வரை உயர்த்தி தந்திடுவதற்கான முயற்சி மேற்கொள்ளும்.

சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கில், சமத்துவ புரங்களை நாடெங்கிலும் ஏற்படுத்த வலியுறுத்துவோம்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்கள் போதுமான அளவில் இடம் பெறவில்லையெனில் அவர்களுக்கு உரிய பங்கு கிடைக்கும் விதத்தில் தர வரிசையினை தவிர்த்து அவர்களுக்கு முன்னுரிமை அளித்து சமூக நீதி காத்திட வலியுறுத்தும்.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து போகும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலம் தென் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பயண நேரம் குறையும். எரிபொருள் மீதமாகும். ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே பெரிய அளவில் வளமும் நன்மையும் கிடைக்கும்.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேது சமுத்திரத் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றிட இணைக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும்.

ஏவப்படும் செயற்கைக்கோளின் எடையின் அடிப்படையிலும், ஏவுதளத்திற்கு எடுத்துச் செல்லும் தூரம் மற்றும் செலவினங்கள் அடிப்படையிலும், குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைவது விண்கலன்களை ஏவும் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் என்பதாலும், தென் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், குலசேகரப்பட்டினத்தில் "இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்" அமைத்திட வற்புறுத்தும்.

திருநெல்வேலி மாவட்டம் கேந்திரகிரியில் "திரவ உந்துவிசை தொழில்நுட்ப மையம்" அமைத்திட பாடுபடும்.

கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைக் தடை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்திருப்பதை திரும்பப் பெறச் செய்து கச்சத்தீவினை மீட்கும் முயற்சியில் தீவிரமாக பாடுபடும்.

வழக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப் போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையில் ஐ.நா. மேற்பார்வையில் "பொது வாக்கெடுப்பு" நடத்தவும், இடைக்கால நிவாரணமாக முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில், 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தில் குறிப்பிட்டுள்ள உரிமைகளை நடைமுறைப்படுத்திடவும் இலங்கை அரசை வலியுறுத்தி தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்பிடித் தொழில் நாகரிகம் வளர்ந்த காலத்திற்கு முன்பிருந்தே நடைபெற்று வரும் மிகப் பழமையான தொழிலாகும். மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிப்பதை மட்டுமே தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கேளரா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்துள்ளனர்.

எனவே, இந்தியா முழுவதும் இருக்கும் மீனவர் சமுதாயத்தை "பழங் குடியினர்" பட்டியலில் இணைப்பதற்கும் - பழங் குடியினருக்குள்ள அனைத்து சலுகைகளையும் மீனவர்கள் பெறுவதற்கும் பாடுபடும்.

அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவதற்குரிய வகையில் ஆட்சி மொழிச் சட்டத்தில், உரிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.

அதனடிப்படையில், திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான இலக்கியப் பண்பாட்டு வளம் நிறைந்த தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கவேண்டுமென்று 1996-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

செம்மொழியான நமது தாய்மொழித் தமிழ், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டு, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவை தமிழிலேயே செயல்பட வேண்டும்.

இதற்காக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 343-வது பிரிவில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக ஏற்க வேண்டும்.
இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும், தேசிய மயமாக்கி இந்தியாவின் வட பாகத்தில் உள்ள கங்கை நதியை தென் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் கிருஷ்ணா, பெண்ணாறு, காவவேரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறு ஆகிய நதிகளுடன் இணைத்திட வேண்டும்.

கேளர மாநிலத்தில் மேற்கு நோக்கிப் பாய்ந்து, அரபிக் கடலில் வீணாகும் அச்சன்கோவில் - பம்பா நதிகளை தமிழ்நாட்டோடு இணைத்திட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கு வடிவம் கொடுப்பதற்கும் நிறைவேற்ற வழிவகைகள் காண்பதற்கும், நிபுணர்கள் அடங்கிய சிறப்புக்குழு ஒன்றை உருவாக்கி அதற்குரிய திட்டச் செலவையும் ஒதுக்கீடு செய்து, இந்தியாவில் கிடைத்திடும் முழுஅளவு நீரின் பயன்பாட்டை உயர்த்தி, உரிய நீர் மேலாண்மை மூலம் இந்திய வேளாண்மையின் தரத்தையும், உற்பத்தியையும் அதிகரித்து வேளாண் பெருங்குடி மக்களைக் காப்பாற்றவும், அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர்த் தேவையை முழுமையாக நிறைவு செய்திடவும் மத்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள பாடுபடும்.

அந்தந்த மாநிலங்களில் மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை அந்தந்த மாநிலங்களின் பயன்பாட்டிற்கே வழங்கப்படுவதற்கும், மிகை மின்சாரம் உற்பத்தியாகும் நிலையில் மட்டுமே மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுவதற்கும், ஒரு மாநிலத்தில் உள்ள மிக மின்சாரத்தை மின் தட்டுப்பாடு உள்ள மற்றொரு மாநிலத்திற்கு எளிதில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களையும் இணைத்திடும் வகையில் மின்வழித் தடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் உரிய திருத்தங்களை கொண்டு வந்து தூக்கு தண்டனையை அடியோடு ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்திலுள்ள பொதுத் துறை நிறுவனங்களான, இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், ஐ.டி.பி.எல் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் மூடவோ, தனியார் மயமாக்கவோ கூடாது. அவை தொடர்ந்து செயல்பட, உரிய முதலீடு செய்வதும் மற்றும் தொழில் நுட்ப அறிவைப் பயன்படுத்துவதும் தேவை என வலியுத்துவோம்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கிட வேண்டும்.

சென்னையில் உள்ள சென்னை உர தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு 4,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கடந்த மூன்றாண்டு காலமாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் சென்னை உரத் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

புதுவை நீண்ட நெடுங்காலமாகவே யூனியன் பிரதேசமாக இருந்து வருவதால், அதற்கு முழு மாநிலத் தகுதி தரப்பட வேண்டும். கோரிக்கை வெற்றி பெற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும்.

நிபந்தனைகளைத் தளர்த்தி அந்திய முதலீட்டார்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் இறங்குமானால், சில்லரை வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு தங்களுடை வாழ்வாதாரத்திற்கு, அதையே நம்பியிருக்கும் பல கோடி சிறு வணிகர்களும் பாதிப்புக்கு ஆளாகும் நிலைமை உருவாகும் என்பதை உணர்ந்து, சில்லரை வணிகத்தில் அந்திய முதலீட்டை முற்றிலுமாகத் தடை செய்வதற்கு பாடுபடும்.

உணவுத் தரத்தைக் கட்டுப்டுத்துவது தேவை என்றாலும், தற்போதுள்ள சட்டத்தைத் திரும்ப பெற்று கொண்டு சிறு, குறு வணிகர்களின் நலன் எந்த வகையிலும் பாதிக்காத அளவிற்கு, அவர்களுடன் கலந்து பேசி, புதிய சட்டத்தை உருவாக்கிட வேண்டும்.

வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய பாடுபடும்.

இன்றைய இளைஞர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு உரிய தகுதிகளைப் பெறுவதற்கும், பயிற்சி அளிப்பதற்கு தேவையான நவீன உலகத்தரம் வாய்ந்த அடிப்படை கட்டுமானங்களை மாவட்டத் தலைநகரங்கள் தோறும் அமைத்திட வேண்டும்.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி, போக்குவரத்து, மின்சாரம், இணைப்புச் சாலை வசதிகள், நீர்வளம் ஆகியவற்றினை மேம்படுத்துவதற்கு வசதியாகப் புதிய தொழிற் கொள்கை வகுத்திட வலியுறுத்தும்.

சென்னை துறைமுகம் -மதுரவாயல் பறக்கும் சாலைத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.

குளச்சல் துறைமுகத்தை நவீன வசதிகள் கொண்ட பன்னாட்டுத் துறைமுகமாக மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும்.

அரசு ஊழியர்கள் 2004-ம் ஆண்டுக்கு முன்பு பெற்று வந்த சலுகைகள் குறையாத வகையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள பாடுபடும்.

தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான அனைத்து உச்ச வரம்பினையும் முழுமையாக நீக்கிட வேண்டும்.

தொழிலாளர் நலத்திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தேசிய அளவில் ஆணையம் அமைக்கபட வேண்டும்.

அஞ்சல்துறையில் பணி புரியும் ஏறத்தாழ இரண்டரை லட்சம் ஜி.டி.எஸ். தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதோடு, அவர்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டுமென மத்திய அரசை திமுகழகம் வற்புறுத்தும்.

ஆண்களின் மாத வருமானம் 50 ஆயிரம் வரையிலும் (அதாவது ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம்) - பெண்கள் மாத வருமானம் 60 ஆயிரம் வரையிலும் (அதாவது ஆண்டு வருமானம் ரூ. 7.20 லட்சம்) இருந்தால், அந்த வருமானத்திற்கு வரிவிலக்கு அளித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.