வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 15 மே 2014 (12:04 IST)

சேலம் மக்களவைத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு மறு வாக்குப்பதிவு தொடங்கியது

சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 254 என்ற எண் கொண்ட வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
 
சேலம் மக்களவைத் தொகுதியில் எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை (மே 15) காலை மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
 
வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 254 என்ற எண் கொண்ட வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
 
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது (ஏப். 24), அந்த வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
 
மறுவாக்குப் பதிவு என்பதால், வாக்காளர்களின் இடதுகை நடுவிரவில் மை வைக்கப்பட உள்ளது என்றும், கடந்த தேர்தலில் வாக்களிக்காத வாக்காளர்களும் மறுவாக்குப் பதிவின்போது தங்களது வாக்குகளைச் செலுத்தலாம் எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்துள்ளார்.
 
மறுவாக்குப் பதிவு நடைபெற்று வரும் எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 254 ஆவது வாக்குச் சாவடியில் மொத்தம் 772 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் அந்த வாக்குச் சாவடியில் மொத்தம் 683 பேர் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். மறுவாக்குப் பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், மூடி சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான ஓமலூர் தாலுகாவுக்கு உள்பட்ட அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
 
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.