1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 27 மார்ச் 2014 (10:34 IST)

சென்னையில் பழிக்கு பழியாக வாலிபர் நடுரோட்டில் வெட்டிக்கொலை

சென்னை மைலாப்பூரில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதத்தில் அவரை வெட்டி சாய்த்த போதை கும்பலை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
 
சென்னை மைலாப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள மாதவராவ் கார்டன் பகுதியில் வசிப்பவர் ஜெயசீலன். பெயிண்டிங் தொழில் செய்கிறார். இவரது மனைவி லோகேஸ்வரி. இவர்களுக்கு பன்னீர் (வயது 28), தமிழ்செல்வம் (24) என்ற 2 மகன்களும், நதியா என்ற மகளும் உள்ளனர். நதியாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அதே பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். பன்னீருக்கும், தமிழ்செல்வத்திற்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
 
தமிழ்செல்வம், சரக்கு ஏற்றி செல்லும் மினி வேனும், பயணிகளை ஏற்றிச்செல்லும், மேக்சிகேப் வேனும் சொந்தமாக வைத்துள்ளார். 
 
நேற்று மாலை 4 மணி அளவில், தமிழ்செல்வம், மைலாப்பூர் லஸ் கார்னர் சிக்னல் அருகில், ஆர்.கே.மடம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தார்கள். அவர்கள் கையில் பட்டாகத்திகள் இருந்தன.
 
அவர்கள் மோட்டார் சைக்கிள்களை விட்டு இறங்கி, சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த தமிழ்செல்வத்தை சரமாரியாக கத்தியால் குத்தினார்கள். அவரது தலையை குறிவைத்து குத்து விழுந்தது. அதில் அவரது மண்டை பிளந்து மூளை வெளிவந்துவிட்டது. தமிழ்செல்வம் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் சாலையில் பரிதாபமாக இறந்துபோனார்.
 
அவரை குத்தி சாய்த்த கொலை வெறி ஆசாமிகள், மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். தப்பிச்சென்ற வேகத்தில் கத்தி ஒன்றையும் அங்கேயே போட்டுவிட்டு போய்விட்டனர். 
 
தகவல் தெரிந்து வீட்டில் இருந்த தமிழ்செல்வத்தின் தாயார் கதறி அழுதபடி ஓடிவந்தார். சாலையில் கொலையுண்டு கிடந்த தமிழ்செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதார். காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மைலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ரவிசேகர், ஆய்வாளர் விமலன் ஆகியோர் விரைந்து வந்தனர்.

தமிழ்செல்வத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல்துறை விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. 
 
அதே பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவனை, தமிழ்செல்வம் அடித்ததாகவும், அதை தட்டிக்கேட்ட அந்த சிறுவனின் பாட்டியையும் தமிழ்செல்வம் தாக்கியதாகவும் தெரிகிறது. இதற்கு பழிவாங்கும் வகையில், அந்த சிறுவனின் தந்தை வெள்ளைக்குமார் என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து வந்து, தமிழ்செல்வத்தை கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 
 
கொலையாளிகள் அடையாளம் தெரிந்துவிட்டதால், உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். கொலை நடந்த பகுதியில் போலீசார் பொருத்திய கண்காணிப்பு கேமரா உள்ளது. அந்த கேமராவில் தமிழ்செல்வம் படுகொலை காட்சியும், அவரை வெட்டிய கொலைகாரர்களின் உருவமும் பதிவாகி உள்ளது. கேமராவில் பதிவான காட்சியை ஆராய்ந்து வருவதாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
கொலை சம்பவம் நடந்த பகுதியில் 2 அரசு மதுக்கடைகள் உள்ளன. அந்த மதுக்கடையில் கொலையாளிகள் மது அருந்திவிட்டு காத்திருந்தனர். தமிழ்செல்வம் தனியாக நடந்து செல்வதை பார்த்து, கொலையாளிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
 
அந்த மதுக்கடைகளில் மது அருந்திவிட்டு, காத்திருந்து, இதுபோல ஏற்கனவே 3 கொலைகள் அங்கு நடந்திருக்கிறது என்றும், கொலைகாரர்கள் அந்த பகுதியை ஒரு கொலைக்களமாக பயன்படுத்துகிறார்கள் என்றும், எனவே அந்த மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு உரிய நடவடிக்கையை உடனே எடுக்கவேண்டும் என்றும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கையாக வைத்தனர். இந்த பட்டப்பகல் படுகொலை சம்பவம், நேற்று மாலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.