செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 5 மே 2014 (11:34 IST)

குண்டு வெடிப்பில் பலியான சுவாதியின் மார்பில் துப்பாக்கி குண்டு காயங்கள்

குண்டுவெடிப்பில் சேதமடைந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். பலியான சுவாதியின் மார்பில் குண்டு துகள்கள் இருந்ததையடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் கடந்த 1 ஆம் தேதி 9 ஆவது பிளாட்பாரத்தில் நின்றிருந்த பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு குண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் அந்த ரயிலில் பயணம் செய்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுவாதி என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
 
குண்டு வெடிப்பினால் ரயிலின் எஸ்- 4, எஸ்- 5 பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. எஸ்- 3 பெட்டி லேசான சேதம் அடைந்தது. காலை 10.35 மணிக்கு ரயிலில் இருந்து கழற்றப்பட்ட அந்த 3 பெட்டிகளும் 11.05 மணி அளவில் 11 ஆவது பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. ரயிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 
அந்த ரயில் பெட்டிகளை கடந்த 3 நாட்களாக தேசிய பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சிபிசிஐடி காவல்துறை, தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது முக்கிய தடயங்களை அவர்கள் சேகரித்தனர். ரயில் பெட்டிகளில் பதிவாகியிருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது.
 
அந்த பெட்டிகளில் நேற்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தடயவியல் பரிசோதனை கூடத்தின் இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவர் வள்ளிநாயகம், மருத்துவர்கள் ஆனந்தி, வெங்கட்ராஜ், ராமலிங்கம் உள்பட மொத்தம் 6 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். பலியான சுவாதியின் இருக்கையையும் அவர்கள் பார்வையிட்டனர்.

சுவாதியின் மார்பு பகுதியில் வெடித்து சிதறிய குண்டு துகள்கள் பாய்ந்திருந்தது பிரேத பரிசோதனையின் போது தெரிந்தது. குண்டு துகளுடன் சேர்ந்து அவர் அணிந்திருந்த ஆடையின் ஒரு சிறு பகுதியும் உடலில் ஆழமாக சென்றிருந்தது.
 
ஆகவே இதற்கான தன்மை பற்றி ஆராய்வதற்காகவும், வழக்கு விசாரணையின்போது துல்லியமான தகவல்களை தெரிவிப்பதற்காகவும் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் விசாரணைக்கு போதுமான தடயங்களும், ஆதாரங்களும் அனைத்து துறையினருக்கும் கிடைத்ததையடுத்து அந்த 3 பெட்டிகளும் நேற்று பகல் 12.20 மணி அளவில் தனி என்ஜின் வரவழைக்கப்பட்டு பேசின்பிரிட்ஜ் பணிமனைக்கு இழுத்துச் செல்லப்பட்டது.
 
அந்த ரயில் பெட்டிகள் முழுவிசாரணை முடியும் வரையிலும் பேசின்பிரிட்ஜ் பணிமனையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 11 ஆவது பிளாட்பாரத்தில் வழக்கமாக சென்னை-அரக்கோணம் பயணிகள் ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக குண்டுவெடிப்பில் சேதமடைந்த பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்த பாதையில் எந்த ரயில்களும் இயக்கப்படாமல் இருந்தது.
 
நேற்று ரயில் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து, மீண்டும் வழக்கம்போல் 11 ஆவது பிளாட்பாரத்தில் ரயில் சேவை தொடங்கியது. கடந்த 2 நாட்களாக பரபரப்பாக காணப்பட்ட சென்டிரல் ரயில் நிலையம் வழக்கமான சூழ்நிலைக்கு மீண்டும் திரும்பியது.
 
பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் இரட்டை குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 14 பேர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 3 பேர் சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
 
இதற்கிடைய மருத்துவமனியில் சிகிச்சை பெற்று குணம் அடைந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த உம்மா அனி (வயது40), முகமது ஷரிபுல்லா(27), மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹரி(21), பெங்களூரை சேர்ந்த ஷகுல் குமார் ராய் (22) மற்றும் திரிபுராவை சேர்ந்த சாத்தம் சந்திர தேவ்நாத் (64) ஆகிய மேலும் 5 பேர் நேற்று தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர். காயம் அடைந்த 14 பேரில் இதுவரை சிகிச்சை முடிந்து 8 பேர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 6 பேருக்கு தீவிர தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.