வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 21 ஏப்ரல் 2014 (10:53 IST)

எனது மகன் வாழ்கையை அரசியலாக்க வேண்டாம்: பேரறிவாளன் தாய் கண்ணீர்

23 ஆண்டுகள் வேதனையை அனுபவித்து வருகிறேன். எனது மகன் வாழ்கையை அரசியலாக்க வேண்டாம் என்று பேரறிவாளன் தாயார் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கோவையில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில் நிருபர்களிடம் கூறும்போது, தான் 25 ஆம் தேதிக்குள் ஓய்வு பெற போவதாகவும், அதற்குள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது வழக்கில் நல்ல தீர்ப்பை வழங்குவேன்’ என்றும் கூறியிருந்தார்.
 
சதாசிவம் பேட்டி தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட இருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்தில் ஏற்படுத்துமோ? என்று கருத்து தெரிவிந்திருந்தார்.
 
காங்கிரஸ் கட்சி சார்பில் நீதிபதி சதாசிவம் பேட்டி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
 
இந்தநிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கண்ணீர்மல்க கூறியதாவது:–
 
எனது மகனுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு வந்தவுடன் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தேன். அப்போது 23 ஆண்டுகள் நான் அனுபவித்து வந்த வேதனை ஒரு நொடியில் மறைந்து போனது.
 
எனது மகன் விடுதலையாகும் நாளை நாங்கள் எண்ணி கொண்டிருக்கும் வேளையில், விடுதலைக்கு முட்டுக்கட்டை போடுவது போன்று கருணாநிதி கருத்து தெரிவித்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
 
எங்களுடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள். என்னையும், எனது மகன் பேரறிவாளனையும் விட்டுவிடுங்கள், நாங்கள் எங்கேயாவது சென்று பிழைத்து கொள்கிறோம்.
 
கடந்த 23 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஊர் ஊராக சென்று அவர்கள் நிரபராதிகள் என்று ஓயாமல் போராடி, அதன்விளைவாக இன்றைக்கு எஞ்சிய வாழ்கையாவது அவர்களுக்கு கிடைத்துவிடும் என்ற மிகுந்த நம்பிக்கையோடு இருக்கும் இந்த வேளையில் எங்களின் இதயங்களில் ஈட்டி பாய்ச்சுவது போல் அமைந்துவிட்டது.
 
23 ஆண்டுகள் மனவலி என்ன என்பதை ஒரு தாயின் இடத்தில் இருந்து தயவு செய்து யோசித்து பார்க்க வேண்டும். எப்படியும், எனது மகன் உள்ளிட்டோருக்கு நியாயம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நிறைவேறிய வேளையில், இப்படி ஒரு கருத்தை பரப்புவது எங்களுக்கு கிடைத்த நீதியை பறித்தது போல் இருந்தது.
 
இந்த 7 பேருக்காகவும் நீதி வெல்ல வேண்டும் என்பதற்காகவும், தமிழகம் மற்றும் உலகம் முழுக்க பல்வேறு கால கட்டங்களில் பலரும் பங்களித்து இருக்கின்றனர். இவர்கள் நிரபராதி என்பது குறித்த ஆவணங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இவர்களது விடுதலையை ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் தருணத்தில், அந்த விடுதலையை தள்ளிப்போடும் விதமாக கருத்து தெரிவித்திருப்பது மிகுந்த மனவேதனையை பலருக்கும் அளித்திருப்பதை என்னோடு பகிர்ந்து கொண்டனர்.
 
நான் வேண்டிக்கேட்டு கொள்வது எல்லாம், இந்த வழக்கில் இதுவரை மறுக்கப்பட்ட உயரிய நீதி கிடைக்கும் வரை, அதனை பாதிக்க செய்யும் எவ்வித அரசியல் கருத்துக்களையும், வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர் கூறினார்.