வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

உமாமகேஸ்வரி கொலை: முக்கிய கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்

பெண் என்ஜினீர் உமாமகேஸ்வரி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினார்கள். அவரை 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
FILE

பெண் என்ஜினீயர் உமாமகேஸ்வரி கற்பழித்து கொலை செய்யப்பட்டு கடந்த 22-ந் தேதி கேளம்பாக்கம் அருகே முட்புதரில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். சிபிசிஐடி காவல்துறை பல்வேறு தகவல்கள், தடயங்களுக்கு பின்பு மேற்குவங்காளத்தை சேர்ந்த ராம்மண்டல் (வயது 23). உத்தம்மண்டல் (23) ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை அடுத்த மாதம் 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் 7 நாட்கள் காவல்துறை காவலில் வைத்து விசாரிக்கவும் நீதிபதி அங்காள ஈஸ்வரி உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான உஜ்ஜன்மண்டல் (19) என்பவனை கொல்கத்தா அருகே காரக்பூர் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று மாலை செங்கல்பட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 நீதிமன்ற நீதிபதி மாஜிஸ்திரேட்டு விடுமுறை என்பதால் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு சிட்டிபாபு முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.

உங்கள் தந்தையின் பெயர் என்ன?. உங்களது வீட்டு முகவரி என்ன?. நீங்கள் செய்த குற்றம் என்ன என்று தெரியுமா? என்று நீதிபதி கேட்டார். தெரியும் என்று தலையாட்டினார். காவல்துறையினர் உங்களை அடித்தார்களா? என்று கேட்டதற்கு இல்லையென்று கூறினான். அவரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். மேலும் குற்றவாளியை அடுத்த மாதம் 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் வருகிற 4-ந் தேதி மாலை 4½ மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
FILE

கொலைகாரன் உஜ்ஜன்மண்டல் சிபிசிஐடி காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, உமாமகேஸ்வரி தனியாக நடந்து வரும்போது பாட்டுப்பாடி கிண்டல் செய்வோம். கிண்டல் செய்யும்போது அவர் எங்களை செருப்பால் அடித்தார். இதனால் எங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் அவரை கொடூரமாக கற்பழித்து மானபங்கம் செய்தோம். அப்போது அவர் என் முகத்தில் எச்சில் உமிழ்ந்தார். கோபம் அடைந்த நான் வாங்கி வைத்திருந்த கத்தியால் அடி வயிற்றில் குத்தினேன். அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அப்படியே விட்டு விட்டால் உயிர் பிழைத்து காவல்துறையில் எங்களை காட்டி கொடுத்து விடுவார் என்று பயந்தேன். இதனால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

ராம்மண்டலும், உத்தம்மண்டலும் உமாமகேஸ்வரியின் கை, கால்களை பிடித்துக் கொண்டனர். அவர் கூச்சலிடாமல் இருக்க வாயை பொத்தி கொண்டனர். உமாமகேஸ்வரி இறந்த உடன் அவர் வைத்திருந்த கிரெடிட் கார்டு, செல்போன், காதில் அணிந்திருந்த தோடு, மோதிரம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு தப்பி விட்டோம்.
FILE

உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டதை பத்திரிகையில் பார்த்ததும் எனக்கு பயம் வந்துவிட்டது. சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தேன். சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சென்றேன். கொல்கத்தா அருகே காரக்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும்போது காவல்துறையினர் என்னை மடக்கி பிடித்தனர் என்று அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் நேற்று இரவு நிருபர்களிடம் கூறும்போது:-

இந்த வழக்கை பொறுத்தமட்டில் 3 முக்கிய குற்றவாளிகளை பிடித்து விட்டோம். அவர்களை காவலில் வைத்து விசாரித்து வருகிறோம். இப்போது வேறு குற்றவாளிகள் யாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. 3 குற்றவாளிகளிடம் காவல்துறை விசாரணை முடிந்த பிறகு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி கூறமுடியும் என்று அவர் கூறினார்.