வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Updated : வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (15:08 IST)

உச்சநீதிமன்றத்தின் முடிவு அதிர்ச்சியையும், வருத்ததையும் அளிக்கிறது- ராமதாஸ்

7 பேர் விடுதலை குறித்தான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முடிவு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதி மன்றம் ஆணையிட்டிருக்கிறது.
 
7 பேரின் விடுதலை தொடர்பாக நல்ல செய்தி வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த தமிழர்கள் அனைவருக்கும் உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்திருக்கிறது.
 
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இவர்களை விடுதலை செய்வது குறித்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 432, 433(ஏ) ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்டு பொருத்தமான அரசு முடிவு செய்யலாம் என்று கூறியிருந்தது.

மாநில அரசின் அதிகார வரம்புக்குள் உள்ள சட்டங்களின்படி தான் இவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்; அது மட்டுமின்றி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ஒருவர் 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்திருந்தால், அவர்களை விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 433(ஏ) பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
 
இவற்றின் அடிப்படையில் தமிழக அரசு சற்று பொறுப்புடனும், பக்குவமாகவும் செயல்பட்டிருந்தால், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், இராபட் பயாஸ் ஆகிய ஏழு தமிழர்களும் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள்.
 
மாறாக, தமிழக அரசு பொறுப்பின்றி செயல்பட்டதால் தான் 7 தமிழர்களின் விடுதலை மிகவும் சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது.
 
7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கை அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம், இதற்கான அரசியல் சட்ட அமர்வு 3 மாதங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. 

உச்சநீதி மன்றத்திற்கு விரைவில் கோடை விடுமுறை விடப்பட விருக்கும் நிலையில், அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்படுவதற்கே இன்னும் பல மாதங்கள் ஆகும். அதன்பின் இந்த வழக்கை இழுத்தடிக்க மத்திய அரசு முயலும் என்பதால் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக சற்று அதிக காலம் ஆகலாம்.
 
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஏற்கனவே 23 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில், மேலும் பல மாதங்கள் அவர்கள் சிறையில் வாட வேண்டும் என்பதே மனித உரிமை மீறல் ஆகும். இத்தகைய சூழலில் 7 தமிழர்களுக்கும் உடனடியாக ஏதேனும் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய அவசியமாகும். இதற்காக இந்திய அரசியல் சட்டத்தின் 161–வது பிரிவைப் பயன்படுத்தி விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் தமிழக அரசின் முன் உள்ளன.
 
இந்த விவகாரத்தின் தமிழக மக்களின் உணர்வுகளை தாம் மிகவும் மதிப்பதாக தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறார். அது உண்மையாக இருந்தால், குறைந்தபட்ச நிவாரணமாக, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக இருட்டுச் சிறையில் வாடும் 7 தமிழர்களும் வெளியுலக சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் வகையில் இவர்களை எவ்வளவு காலத்திற்கு சிறை விடுப்பில் (பரோல்) அனுமதிக்க முடியுமோ அவ்வளவு காலத்திற்கு சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்.
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்