வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Veeramani
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (11:58 IST)

அன்புமணி ராமதாஸ் பிரச்சார வேன் மீது கல்வீச்சு - வைகோ கண்டனம்

தர்மபுரி அருகே பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சார வேன் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
தருமபுரி மாவட்டம் பெத்தூர், சந்தபட்டி இடையே பாமக வேட்பாளர் அன்புமணியின் பிரச்சார வாகனத்தின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் பிரச்சார வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாமகவினர் அரூர்–தர்மபுரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். மேலும், அன்புமணி ராமதாஸ் போராட்டம் நடத்த வேண்டாம் என கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
 
கல்வீச்சில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். இந்த தாக்குதலில் அன்புமணி ராமதாசுக்கு வலது கையில் லேசான காயம் ஏற்பட்டது.
 
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, சிலர் திட்டமிட்டு இது போன்ற தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற விரும்புகிறோம். மக்களின் ஆதரவு பாமக பக்கம் உள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலரின் திட்டமிட்ட சதி செயலாகும்.
 
இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமகவினர்கள் அமைதி காக்க வேண்டும். வன்முறைகள் செய்வதன் மூலம் எனது வெற்றியை தடுக்க முடியாது.
 
தர்மபுரி மாவட்ட மக்களை நம்பித்தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். மாறாக வன்முறை செய்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் ஒரு போதும் பாமகவுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 
அன்புமணி ராமதாஸ் பிரச்சார வேன் மீது கல்வீசி தாக்கப்பட்டது தொடர்பாக அரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பெத்தூரை சேர்ந்த மதி என்கிற மதியழகன் (50), மாசிலாமணி (60), செல்லப்பன் என்பவரது மகன் பிரசாந்த் (20), அன்பரசன் (18) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
 
இவர்கள் மீது 147, 148 (அனுமதியின்றி கூடுதல்), 141, 341, 323, 324, ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
 
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது கொலை வெறி நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
 
கற்பனை செய்வதற்குக் கூட முடியாத பெரும் பின் விளைவு பாதகங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கொடிய நோக்கத்தோடு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அவர் பயணித்த டெம்போ டிராவலர் வாகனத்தில் முன் இருக்கையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அமர்ந்திருந்த நிலையில், இரண்டு கிலோவுக்கு மேல் எடையுள்ள கூர்மையான கருங்கல் அவரைக் குறிபார்த்து வீசப்பட்டுள்ளது.
 
கண்ணாடியை உடைத்துக் கொண்டு கல் உள்ளே போய் விழுந்திருக்கிறது. இயற்கை அன்னையின் கருணையால் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உயிருக்கு ஆபத்து நேரவில்லை.
 
இந்த கொலைவெறி வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் திட்டமிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு கைது செய்து கூண்டில் நிறுத்த வேண்டும்.
 
நெஞ்சம் கொதிக்கின்ற வேதனையை இச்சம்பவம் ஏற்படுத்திய போதிலும், பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தோழர்களும், பொது மக்களும் அமைதி காக்க வேண்டுகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.