பட்டப்பகலில், வாலிபரரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்

Suresh| Last Updated: புதன், 13 மே 2015 (09:40 IST)
சென்னை சூளையில், பட்டப்பகலில் வாலிபரை
ஓட ஓட விரட்டிகச் சென்று வெட்டிக் கொலை செய்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பல்லவன் சாலையை சேர்ந்தவர் கார்த்திக் என்ற பல்லவன் கார்த்திக். இவருக்கு வயது 30. இவர் நேற்று மாலை 4 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சூளை, சட்டண்ணன் தெருவில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, ஆட்டோவில் வந்த ஒரு கும்பல், கார்த்திக்கை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. வெட்டுக் காயங்களுடன் கார்த்திக் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்.
இதைத் தொடர்ந்து, டி.கே. முதலி தெரு அருகே அவரை சுற்றி வளைத்த அந்த கொலை வெறிக்கும்பல், அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

இந்த சம்பவத்தை நேரில்கண்ட பொதுமக்கள் நாலாபுறமும் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள். இது குறித்து வேப்பேரி காவல்துறை ஆய்வாளருக்குத் தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, கார்த்திக் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், இந்த கொலைக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட கார்த்திக் மீது நீலாங்கரை காவல் நிலையத்தில் கொலை வழக்கு, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு என்று பல வழக்குகள் உள்ளதன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட கார்த்திக் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கார்த்திக் வசிக்கும் பல்லவன் சாலை பகுதியில் வசிப்பவர் ஜோ என்ற ஜோசப். இவருக்கும், கார்த்திக்கிற்கும் பல்லவன் சாலையில் யார் பெரியவர் என்ற போட்டியின் காரணமாக மோதல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஜோசப்பும், கார்த்திக்கும் சில மாதங்களுக்கு முன்னர், புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்தபோது, சிறைக்குள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஒருவரை ஒருவர் அடித்தும் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, இருவரும் சிறையில் இருந்து வெளியில் வந்ததும், மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. இதனால், ஜோசப் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கார்த்திக்கை வெட்டிக்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை காவலர்கள், இந்த கொலை சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் ஜோசப்பை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.
மேலும், ஜோசப்பின் கூட்டாளிகளான பல்லவன் சாலை எஸ்.எம்.நகரை சேர்ந்த ஆரோக்கியதாஸ், குணசீலன், வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜோசப் உள்பட 4 பேரும் நேற்று மாலை 4 மணி அளவில் ஆட்டோவில் சூளை பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவுக்கு முன்பாக கார்த்திக் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளார்.

கார்த்திக் தன்னை கொலை செய்ய திட்டமிட்டு தன்னை பின் தொடர்ந்து வருவதாக நினைத்த ஜோசப், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கார்த்திக்கை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கொலை வழக்கில் ஜோசப் உள்பட 4 பேரையும் கைது செய்த வேப்பேரி காவல்துறையினர், அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :