வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2015 (10:54 IST)

சிக்கன் வாங்கி தராத நண்பரை கத்தியால் குத்திய வாலிபருக்கு ஆயுள் தண்டனை

ஓட்டலில் சாப்பிட சிக்கன் வாங்கி தராத தகராறில் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் சிறை விதித்து பூந்தமல்லி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 

 
போரூர் அடுத்த சின்னப்போரூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (23). இவர், கடந்த 06-10-2012 மோகனசுந்தரம் தனது நண்பர்களான ஜான்சன், சதீஷ் (24), துரைராஜ் (21), பாலு (25) ஆகியோருடன் மவுலிவாக்கத்தில் நடந்த கபடி போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
 
வரும் வழியில் அங்குள்ள ஓட்டல் ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது பாலு, தனக்கு சிக்கன் வேண்டும் என்று நண்பர்களிடம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதற்கு மோகனசுந்தரம், தற்போது யாரிடமும் பணம் இல்லை என்று கூறியுள்ளார். 
 
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகனசுந்தரத்தின் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
 
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மோகனசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கு கடந்த 4 வருடமாக பூந்தமல்லி அமர்வு நீதிமன்றம் நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி, பாலு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் ஒருவருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.