வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2015 (23:53 IST)

உலக மீனவர் தின வாழ்த்து: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

கடும் மழையினால் பாதிப்பிற்குள்ளான மீனவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவி செய்ய வேண்டும் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.  
 

 
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாட்டில், சுமார் 700 கி.மீ. கடற்கரையையும், 13 மாவட்டங்களில் மீன்பிடிக்கும் தொழிலை செய்யும் மீனவர்கள் நிரம்பி வாழும் நிலையில், உலக மீனவர்கள் தினம் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. 
 
ஆனால், மீனவர்கள் நாள்தோறும் பல்வேறு பிரச்சினைககளை சந்திக்க வேண்டிய அவலநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இவர்களது பிரச்சினைகளுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்த ஒருசில நாட்களிலேயே தீர்வு காணப்படும் என்று கூறி கடல் தாமரை மாநாடு நடத்தி, ஆட்சியில் அமர்ந்த பாஜகவினர் இதுவரை கண்டு கொள்ளவில்லை.
 
நீண்டகாலமாக இப்பிரச்சினை இருப்பதை கருத்தில் கொண்டு மத்திய காங்கிரஸ் அரசு அதனுடைய அடிப்படை தன்மையை உணர்ந்து அதற்கான தீர்வாக இருநாட்டு மீனவர்கள் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. காங்கிரஸ் ஆட்சியில் இரு நாட்டு மீனவர்களிடம் இரண்டுமுறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு அறிகுறிகள் தென்பட்டன. 
 
ஆனால் இதில் முதல்வர் ஜெயலலிதா அரசு அக்கறை காட்டவில்லை. மேலும், பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டது. இதனால் இப்பிரச்சினை இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது. இயற்கையின் சீற்றத்திலிருந்து இவர்களை காப்பாற்றுவதற்கு மத்திய - மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 
எனவே, இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி, இப்பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவர மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.