வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2016 (10:31 IST)

சுதாகரன் திருமண செலவை கணக்கிட புதிய கால்குலேட்டர் வாங்க வேண்டும் - ஜெ. வழக்கில் நீதிபதிகள் கிண்டல்

சுதாகரன் திருமண செலவை கணக்கிட புதிய கால்குலேட்டர் வாங்க வேண்டும் - ஜெ. வழக்கில் நீதிபதிகள் கிண்டல்

சுதாகரனின் திருமணச் செலவு தொடர்பான கணக்குகள் கணக்கிட புதிய கால்குலேட்டர்தான் வாங்க வேண்டும் என்று ஜெயலலிதா வழக்கில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 

 
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதின்றத்தில் நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான அடுத்தகட்ட விசாரணை மார்ச் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இவ்வழக்கில் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, கடந்த செவ்வாயன்று இறுதிவாதம் துவங்கியது.
 
முதலில் கர்நாடக அரசுத்தரப்பில், மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதத்தை துவங்கினார். கடந்த 2 நாட்களாக தனது இறுதி வாதத்தை வைத்த அவர், வியாழக்கிழமையும் வாதத்தைத் தொடர்ந்தார்.
 
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் சொத்துக்குவிப்பு வழக்கின் சாட்சியங்கள், அரசுச் சான்றாவணங்களை மிக நுட்பமாக ஆராய்ந்து, ஜெயலலிதா தரப்பு ரூ.55 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஆனால், நீதிபதி குன்ஹா கட்டுமானச் செலவு குறித்து சுமார் 100 பக்கங்களில் அலசி ஆராய்ந்த விவகாரத்தை, நீதிபதி குமாரசாமி வெறும் மூன்றே பக்கங்களில் கடந்து சென்றுள்ளார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் ஜெயலலிதா தரப்பினர் தாக்கல் செய்த கட்டுமான மதிப்பை ஏற்பதற்கு எந்த விளக்கமும் குறிப்பிடப்படவில்லை.
 
நீதிபதி குன்ஹா, நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு ரூ. 14 கோடி சந்தாதாரர்கள் மூலம் வரவில்லை என ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். ஜெயலலிதா வுக்கு வந்த பரிசுப் பொருட்களும் வருமானமாக எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
 
அதேபோல, சுதாகரனின் திருமணத்துக்கு ரூ. 3 கோடி செலவானதாக கணக்கிட்டுள்ளார். ஆனால் நீதிபதி குமாரசாமியோ ரூ. 28 லட்சம் மட்டுமே செலவு செய்யப்பட்டதாகவும், மீதிச் செலவை மணமகளின் தாய்மாமன் ராம்குமார் ஒத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
 
எனவே, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்து விட்டு வழக்கின் சாட்சியங்கள், அரசின் சான்றா வணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தவே கூறினார்.
 
அப்போது குறுக்கிட்ட நீதிபதி பினாகி சந்திரகோஷ், “சுதாகரனின் திருமணச் செலவு தொடர்பான கணக்குகள் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒருவிதமாக இருக்கிறது; கர்நாடக அரசு வேறுவிதமாக கூறுகிறது; ஜெயலலிதா தரப்பு புதுவிதமாக சொல்கிறார்கள்; நீதிபதி குமாரசாமி புதிய கணக்கை தீர்ப்பில் குறிப்பிடுகிறார்” என்றதுடன், எல்லாவற்றையும் சரியாக கணக்கிட புதிய கால்குலேட்டர் தான் வாங்க வேண்டும் போலிருக்கிறது என்றும் கிண்டல் தொனிக்க கூறினார்.
 
மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை அனைவரும் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அன்றைய தினம் வழக்கறிஞர் தவேயின் வாதம் தொடரும் என்றும் அறிவித்தனர்.