வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 10 மே 2016 (10:10 IST)

ஆயிரம் ரூபாய்க்கு உங்கள் வீட்டை கொள்ளையடிக்க அனுமதிப்பீர்களா? - வ.உ.சி. பேத்தி கேள்வி

ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு உங்கள் வீட்டை நான் கொள்ளையடித்துக் கொள்கிறேன் என்றால் அனுமதிப்பீர்களா? அப்படித்தான் வாக்குகளுக்கு பணம் கொடுப்பவர்கள் என்று வ.உ.சி. பேத்தி மரகத மீனாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா அணி வேட்பாளர்களை ஆதரித்து செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் பேத்தி மரகத மீனாட்சி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் என். பாண்டியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 
அப்போது பேசிய அவர், ”உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். ஓட்டுபோட பணம் வாங்கலாமா? ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு உங்கள் வீட்டை நான் கொள்ளையடித்துக் கொள்கிறேன் என்றால் அனுமதிப்பீர்களா? அப்படித்தான் வாக்குகளுக்கு பணம் கொடுப்பவர்கள்.
 
இந்த நாட்டை கொள்ளையடிக்க உங்களிடம் அனுமதி கேட்கிறார்கள். வீட்டைவிட நாடு முக்கியம். நாட்டை பாதுகாத்தால்தான் வீடு பாதுகாப்பாக இருக்கும். இந்த நாட்டில் நமது முன்னோர்கள் செக்கிழுத்து ரத்தம் சிந்தி சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள். அந்த நாட்டையும், நமது சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டாமா?
 
கொள்ளையர்கள் நாட்டை சுரண்டிக் கொள்ளையடிக்க அனுமதிக்கலாமா? சந்தர்ப்பம் என்பது ஒரு முறைதான் வாசல் கதவை தட்டும். இந்த ஆட்சியை அகற்ற அப்படிஒரு சந்தர்ப்பம் இந்த தேர்தலில் நமது வாசல் கதவை தட்டுகிறது. நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 
இன்றைக்கு நல்ல தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தலைவர்களை நாம் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க வேண்டும்.நான் எந்த கட்சியையும் சேர்ந்தவள் இல்லை.நமது சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். அன்றைக்கு வெள்ளையர்களுக்கு எதிராக நாடு கிளர்ந்தெழுந்தது. இன்று கொள்ளையர்களுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும்” என்று கூறியுள்ளார்.