1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2016 (14:29 IST)

மனைவியை நடுரோட்டில் அடித்துக் கொன்ற கணவன்: பரபரப்பு வாக்குமூலம்

குடும்பத் தகறாறு காரணமாக சாத்தான்குளம் அருகே மனைவியை உருட்டுக் கட்டையால் அடித்து கணவர் கொலை செய்துள்ளார்.


 

 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தைச் சேர்ந்தவர் மோசஸ். இவர் தற்போது கருங்கடல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
 
இவரது மனைவி பூங்கோதை. இந்த தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வெறுப்படைந்த மனைவி சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளார்.
 
இதனால், ஆத்திரமடைந்த மோசஸ் பூங்கோதையை நடுரோட்டில் கம்பால் அடித்து கொலை செய்தார்.
 
இது குறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தான்குளம் காவல்துறையினர் மோசசை கைது செய்தனர். 
 
மோசஸ் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
 
எனது மனைவி பூங்கோதை எங்களது ஊரில் நடக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு சென்று வந்தார்.
 
அப்போது அவருடன் வேலை பார்க்கும் ஆண்களுடன் சகஜமாக பேசி, பழகி வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
 
இதனால் மது குடித்து விட்டு வந்து, எனது மனைவி பூங்கோதையுடன் அடிக்கடி தகராறு செய்தேன்.
 
கூலி வேலை செய்து வந்த நான் குடிப்பழக்கத்தால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் எனது மனைவியிடம்தான் செலவுக்கு பணம் வாங்குவேன்.
 
சம்பவத்தன்று மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்போது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.
 
இதில் மனைவியை அடித்து உதைத்தேன். உடனே சாத்தான்குளம் காவல்துறையினரிடம் புகார் செய்வதற்காக எனது மனைவி புறப்பட்டு சென்றார்.
 
அவளுடன் எனது மகன் சாத்ராக்கும் சென்றான். நான் அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சென்றேன்.
 
அவர்கள் இருவரும் கருங்கடலில் இருந்து பேருந்தில் ஏறி சாத்தான்குளம் சென்றனர். நானும் அதே பேருந்தில் ஏறி பின்னால் அமர்ந்து கொண்டேன்.
 
அவர்கள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை அருகே இறங்கி காவல் நிலையத்திற்கு நடந்து சென்றனர்.
 
அப்போது அங்கு சென்ற நான் எனது மனைவியை வழிமறித்து காவல்துறையினரிடம் புகார் செய்ய வேண்டாம் என்று கூறி தடுத்தேன்.
 
ஆனால் அதை கேட்காமல் காவல்துறையினரிடம் புகார் செய்ய அவர் சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து மனைவி பூங்கோதை தலையில் ஓங்கி அடித்தேன்.
 
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கிருந்து தப்பி ஓட முயன்றேன்.
 
அப்போது, எனது மகன் சத்தம் போட்டதால் அந்த இடத்தில் கூடிய பொதுமக்கள் என்னை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் மோசஸ் கூறியுள்ளார்.