வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2015 (23:28 IST)

துப்புரவு பணியில் அதிமுகவினர் ஈடுபடாதது ஏன்? விஜயகாந்த் கேள்வி

சென்னையில், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில், அதிமுகவினரை துப்புரவு பணியில் ஈடுபட சொல்லாதது ஏன்? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சென்னையை சுத்தம் செய்ய ஆயிரக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்துவரப்பட்டதாகவும், அவர்களின் பணிச்சுமைக்காக கூடுதல் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டதாக அதிமுக அரசு கூறியுள்ளது.
 
ஆனால், சென்னை வந்துள்ள ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு சரியான உணவும், இருப்பிட வசதியும் செய்துதரவில்லை என்று கூறுகின்றனர்.
 
அரசு தரப்பில் சொல்லப்படும் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கைக்கும், தற்போது சென்னையில் உண்மையாகவே துப்புரவு பணி செய்பவர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் “மலைக்கும், மடுவுக்கும்” உள்ளதுபோல் உள்ளது.
 
மேலும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்கள் நியமனத்திலும், பணியாற்றுவதிலும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் துப்புரவு பணியாளர்களே குற்றம் சாட்டுகின்றனர்.
 
நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அனைத்துதரப்பு மக்களும் ஒன்றுசேர்ந்து தேமுதிக சார்பில் ஞாயிறு அன்று துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
 
இவர்களெல்லாம் என்ன துப்புரவு பணியாளர்களா? இல்லையே, தங்களாலான உதவியை செய்யவேண்டும் என்கின்ற நல்ல மனமும், சிந்தனையும் தானே துப்புரவு பணியை செய்ய வைத்தது.
 
நான், எனது, என்னுடையதென உரிமை கொண்டாடும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அந்த சிந்தனையும், அக்கறையும் இல்லையா?
 
அரசின் இலவச பொருட்களை அரசு அதிகாரிகள் வழங்கும் போது அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மேயர்கள், மாவட்டம், ஒன்றியம்,  நகராட்சி,  பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் போன்ற அனைவரும் முன்வரிசையில் நின்று, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு, போஸ் கொடுப்பதில் காட்டும் அக்கறையை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவுபணி செய்வதில் காட்டியிருக்கலாம் அல்லவா?  அதிமுகவில் துப்புரவு பணி செய்வதற்கு யாரும் தயாராக இல்லையா? அடுத்தவர்கள் கொண்டுவரும் நிவாரண பொருட்களில் ஜெயலலிதாவின் படத்தை ஓட்டுவதில் அக்கறை காட்டுபவர்கள், அதே அக்கறையை துப்புரவு பணியில் காட்டியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.