வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (09:17 IST)

சுவாதி கொலை எதிரொலி: பொதுமக்கள் பாதுகாப்புக்கு புதிய சட்டம் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் ஏன் கொண்டு வரக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், இது தொடர்பாக நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


 
 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கடந்த 24-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பொதுமக்களின் உயிருக்கு உள்ள உத்தரவாதம் தொடர்பாக 15 கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் இதுதொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.கே.கௌலுக்கு மனுவை அளித்தார்.
 
இந்த மனுவை பொதுநல வழக்காக விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், எஸ்.கே.கௌல், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அதில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களைக்கூட பொருத்தாதது ஏன்?
 
கேமராக்களுடன் நவீன கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கு போதுமான நிதியை ஒதுக்காதது ஏன்?
 
மாநில காவல் துறை, ரயில்வே பாதுகாப்பு படைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்?
 
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் நவீன கட்டுபாட்டு மையங்களை ஏன் உருவாக்கக் கூடாது?
 
ஆந்திராவில் சிறப்பாக செயல்படுத்தப்படும் பொதுமக்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் ஏன் அமல்படுத்தக் கூடாது அல்லது இந்தச் சட்டத்தை ஏன் மத்திய அரசே இயற்றக்கூடாது?
 
பள்ளியிலேயே பெண்களுக்கு வழங்க வேண்டிய மரியாதை குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவருடைய மனோபாவத்தை அளவிடும் பணிகளை ஏன் செய்யக்கூடாது?
 
பெண்களுக்கு மதிப்பளிக்கும் புதியக் கல்வியை ஏன் தொடங்கக்கூடாது?
 
சுவாதி படுகொலை நிகழ்வுக்கு பொறுப்பேற்றும், பாதுகாப்பு வழங்க தவறியதற்கும், அவரின் உடலை 2 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் நிலையத்திலேயே போட்டதற்கும் இழப்பீடாக ரயில்வே நிர்வாகம் ஏன் சுவாதியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கூடாது?
 
ரயில்வே போலீஸில் பெண் காவலர்களின் எண்ணிக்கையை ஏன் அதிகப்படுத்தக்கூடாது?
 
ஏன் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு விளம்பரம் செய்யக்கூடாது?
 
இந்தக் கேள்விகளுக்கும் மத்திய அரசு, ரயில்வே அமைச்சகம், ரயில்வே பாதுகாப்பு படை, தமிழக முதன்மைச் செயலாளர், உள்துறை தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி, சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.