வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 3 ஜனவரி 2016 (15:42 IST)

அரசு பெரிய பெரிய நிறுவனங்களின் கட்டிடங்களை ஏன் அகற்றுவதில்லை? - நடிகை ரோகினி கேள்வி

ஆக்கிரமிப்பு என்றால் அரசு ஏழைகளின் வீடுகளைத்தான் அகற்றுகிறது. பெரிய பெரிய நிறுவனங்களின் கட்டிடங்களை ஏன் அகற்றுவதில்லை?” என்று நடிகை ரோகினி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 
திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ரோகினி, ”சினிமாவைத் தாண்டி சமூகத்தைப் பார்க்கும் போது உண்மையாக சில விசயங்கள் உண்டு. அதை நான் செய்து வருகிறேன். சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை. சமூகத்தில் ஏற்பட்டுள்ள அநீதிகளுக்கு எதிராக போராட வேண்டும்.
 
இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவுவதற்காக பலர் முன்வருகிறார்கள். ஐ.டி. துறையில் பணியாற்றும் இளைஞர்கள் கூட மழை வெள்ளத்தையொட்டி மக்களுக்கு நாங்களும் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறோம்; என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்கிறார்கள்.
 
ஆனால் முதல் மழை வந்த போதே உடனடியாக குரல் கொடுத்தது, கைகோர்த்து நிவாரணப் பணிகளில் ஈடுபட என்னை அழைத்தது சென்னையில் உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தான். முதல் மழையின் நிவாரணப்பணிகள் இன்னும் கூட முடிவடையவில்லை. இந்த நிவாரணப்பணியை என்னால் செய்யமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு அப்போது தான் வந்தது.
 
கல்விக்காகவும், வேலைக்காகவும், குடியிருக்க இடம் கேட்டும் போராட வேண்டி உள்ளது. அதோடு நமது உரிமைகளுக்காகவும் போராட வேண்டியுள்ளது. இந்த அவலம் நிறைந்த சமூகத்தை மாற்றக் கூடிய வலிமை நமது கையில் உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டி உள்ளது. இதுதான் மக்கள் எழுச்சி.
 
சென்னை கோட்டூர் புரத்தில் இருந்து ஈசிஆர் சாலை வரை தட்டி போர்டுகள் வைத்தார்கள். பொதுமக்கள் அந்த தட்டி பேனர்களை கிழித்தெறிந்தார்கள். இதுதான் மக்கள் எழுச்சி. எப்படிப்பட்ட சிந்தனையாளர்கள் அதிகாரத்தில் இருந்தால் நமக்கு நல்லது என்று நாம் மக்களுக்கு சொல்லியாக வேண்டும்.
 
ஆக்கிரமிப்பு என்றால் அரசு ஏழைகளின் வீடுகளைத்தான் அகற்றுகிறது. பெரிய பெரிய நிறுவனங்களின் கட்டிடங்களை ஏன் அகற்றுவதில்லை?” என்று கூறியுள்ளார்.