வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 3 மே 2016 (08:22 IST)

எம்.ஜி.ஆரை ஜெயலலிதா மறந்தது ஏன்? - விஜயகாந்த் கேள்வி

எம்ஜிஆர் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் ஒரு திட்டத்திற்குக்கூட அவர் பெயரை சூட்டுவதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா அணியில் போட்டியிடும் புதுக்கோட்டை தொகுதி வேட்பாளர் என்.ஜாகீர் உசேன் (தேமுதிக), கந்தர்வக்கோட்டை தொகுதி வேட்பாளர் எம்.சின்னத்துரை (சிபிஎம்), ஆலங்குடி தொகுதி வேட்பாளர் க.சந்திரசேகரன் (மதிமுக), விராலிமலை தொகுதி வேட்பாளர் கார்த்திக்கேயன் (தேமுதிக), அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் எஸ்.பி.லோகநாதன் (சிபிஐ), திருமயம் தொகுதி வேட்பாளர் பிஎல்ஏ.சிதம்பரம் (தமாகா) ஆகியோரை அறிமுகம் செய்து விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது பேசிய விஜயகாந்த், ”முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை தலை நிமிரச் செய்வேன் என்கிறார். முதலில் அவரது அமைச்சர்களை தலை நிமிரச் செய்யட்டும். ஐந்தாண்டுகாலம் அமைச்சர்கள் ஜெயலலிதாவுக்காக பால்காவடி, பறவைக் காவடி எடுத்ததுதான் மிச்சம். மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை.
 
எம்ஜிஆர் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் ஒரு திட்டத்திற்குக்கூட அவர் பெயரை சூட்டுவதில்லை. மூன்றாவது அணி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை என்கிறார் கலைஞர். ஒருவேளை வயது காரணமாக பார்வைக் கோளாறால் அப்படித் தெரியலாம்.
 
தமிழகத்தில் அனைத்துத்துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. எங்கள் 6 கட்சியில் உள்ள தலைவர்கள் ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட ஆளாகாதவர்கள். நாங்கள் ஆறுமுகம். இனி ஏறுமுகமாகும். புதிய தலைமுறை வாக்காளர்கள் எங்களுக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போரில் எங்கள் கூட்டணி வெல்லப்போவது உறுதி” என்று கூறியுள்ளார்.