வெள்ளை அறிக்கை வெளியீடு.. திமுகவுக்கு ஆதரவாக மாறினார்களா அதிகாரிகள்? கடுங்கோபத்தில் முதல்வர்?
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசு, கடந்த திமுக ஆட்சியின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. ஆனால், இதில் மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய தகவல்களும், திமுக அரசின் நிதி முறைகேடுகளும் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருப்பதாக கூறி, முதல்வர் விஜய் சம்பந்தப்பட்ட நிதித்துறை அதிகாரிகளுக்கு கடுமையான டோஸ் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே 10-ம் தேதி தவெக ஆட்சி அமைந்ததும், திமுகவின் நிதி நிலவரம் குறித்து அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட அறிக்கையில், முறைகேடுகள் எதையும் பட்டியலிடாமல், கடன் அளவு கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் கூறியது தவெக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கடன் சுமை 13 லட்சம் கோடி என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து, பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுகவை முடக்க நினைத்த தவெக-வின் திட்டம் இதனால் பாழாகியுள்ளது.
திமுக ஆட்சியில் டெண்டர்களில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்கள், துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வீணடிக்கப்பட்ட தொகை போன்ற எந்தவொரு முக்கிய விபரமும் இதில் இடம்பெறவில்லை. இதனால் தவெக ஐடி அணியினரால் எதிர்க்கட்சியை நோக்கி எந்த கேள்வியும் எழுப்ப முடியவில்லை.
இந்த சொதப்பலால் அதிருப்தியடைந்த முதல்வர் விஜய், வரவிருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் தனது பதிலுரையின் மூலம் விடுபட்ட அனைத்து ஊழல் விபரங்களையும் அம்பலப்படுத்த முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
Edited by Siva
