வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Veeramani
Last Modified: செவ்வாய், 6 மே 2014 (18:33 IST)

கடந்த முறை சிவகங்கையில் நடந்தது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் - தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பேட்டி

மே 16 ஆம் தேதி நடைபெறும் பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் 24 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 16 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கோவையில் இன்று பயிற்சி நடைபெற்றது.
 
தேர்தல் தொடர்பாக இதுவரை 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 1200 வழக்குகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகளுக்கு வருகிற 16 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
 
தேர்தல் பிரச்சாரத்தின்போது ரூ.10 லட்சத்துக்குறைவான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் பணத்துக்கு உரியவர்கள் அதற்கான கணக்கை தேர்தல் ஆணையத்திடம் காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் இருந்தால் அது வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் அதற்கான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் செலவுகள் தொடர்பான கணக்கை வாக்கு எண்ணிக்கை முடிந்த 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
 
அந்த கணக்கில் ஏதாவது முறைகேடுகள் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்றவராக இருந்தாலும் அவர்களது வெற்றி தகுதி நீக்கம் செய்யப்படும். மேலும் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும். சிவகங்கையில் கடந்த முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது போல் இந்த முறை ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு சுற்றின் போதும் ஏஜென்ட்களிடம் கையெழுத்து பெறப்படும். அதன்பின்னரே அடுத்த சுற்று தொடங்கும்.
 
இவ்வாறு தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறினார்.